‘ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
தலைமைச் செயலகம் வெப் சீரிஸுக்கு பிறகு நடிகர் பரத்தின் அடுத்த ரிலீஸ் இதுதான். இதில் அபிராமி, பவித்ரா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் நல்ல திரைப்படங்களைத் தேர்வு செய்வதில் இருக்கும் சவால்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் நடிகர் பரத்.
இந்த நிகழ்வில் பேசிய பரத், “நான் நெப்போடிஸம் பகுதியெல்லாம் தாண்டி வந்துட்டேன். நான் சினிமாவுக்கு வரும்போது ரொம்பவே ஓப்பனாக இருந்துச்சு. வாரிசு நடிகர்கள் எங்களைப் போட்டு அமுக்குகிற மாதிரியான விஷயங்கள் இல்ல. தமிழ் சினிமாவைப் பொறுத்த வரைக்கும் நல்ல கதைகள் பண்ணினால் காசு கிடைக்கும். அப்படி நல்ல படங்கள் மேல ஏறி போய்கிட்டே இருக்கலாம்ங்கிற கணக்குதான் இங்க இருக்கிறது. ஒரு சமயத்தில் நம்மை நாமே இழுத்துப் போக வேண்டியதாக இருக்கிறது. அப்போது சில நல்ல கதைகளும் வருகிறது. ஆனால் சரியான தயாரிப்பாளர்கள் அமையமாட்றாங்க.
மூன்று புள்ளிகளைச் சரியாக இணைக்கும்போது அடுத்தகட்டத்துக்கு போகிறதுக்கான வாய்ப்பு கிடைக்கும். நான் இப்போதுகூட இரண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு நல்ல கதை கேட்டேன். அந்தக் கதையைச் சொன்ன இயக்குநரே ஒரு தயாரிப்பாளரைக் கூட்டிட்டு வந்தார். ஆனால், அந்த தயாரிப்பாளர் வேறு ஒரு நடிகரை வைத்து அந்த கதையைப் பண்ணனும்னு சொன்னார். இப்படியான சூழல்ல எனக்கு வர்ற நல்ல கதைகளை நான் தயாரிக்க வேண்டும் இல்லையென்றால் என்னுடைய நண்பர்கள் தயாரிக்க வேண்டும். ஆனால் அது நடக்காது. அதுனால எனக்கு வர்ற கதைகளைச் சரியாகப் பண்ணி அடுத்த கட்டத்துக்குப் போகிறதுக்காக நான் தொடர்ந்து முயற்சி பண்ணிக்கிட்டே இருப்பேன்.” என்றார்.