- அடுத்த பத்தாண்டுகளில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
- இலங்கையை தன்னிறைவானபுதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாகும் – ஜனாதிபதி.
இலங்கையில் 1977 ஆம் ஆண்டு அரசாங்கம் ஆடைத் கைத்தொழிலை நாட்டின் பிரதான பொருளாதாரமாக மாற்றியது போன்று, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையை அடுத்த தசாப்தத்தில் நாட்டின் பிரதான பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதன்படி, இலங்கையை தன்னிறைவான புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியாளராக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், மேலதிமான வலுசக்திக்கான கேள்வி எப்போதும் இருக்கும் என்பதோடு, உத்தேச இந்தியா – சிங்கப்பூர் மின் இணைப்பு நடைமுறைக்கு வந்தால், அதில் இணைந்துகொள்ள தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் முதலாவது இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையமான கெரவலப்பிட்டிய ‘சொபாதனவி’ ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையத்தின் முதல் கட்டத்தை நேற்று (28) காலை திறந்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் தெரிவித்தார்.
இலங்கையின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதற்காக நாட்டின் மின்சார விநியோகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் முக்கியமான உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டமான ‘லக்தனவி’ நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட “சொபாதனவி” மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்பிற்கு 350 மெகாவோட் மின்சாரத்தை பெற்றுத்தரும்.
முதல் கட்டமாக, 220 மெகாவாட் வலுவை கொண்ட F-Class gas turbines இயக்கும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதனால் நாட்டின் தேசிய மின் கட்டமைப்புக்கு மின்சார உற்பத்தி மூலத்துக்கு தேவையான பங்களிப்பு வழங்கப்படும். இரண்டாம் கட்டம், 2025 ஆம் ஆண்டின் ஆரம்ப பகுதியில் நிறைவு செய்யப்படவுள்ளது. நீராவி சுழற்சி விசையாழி ஒன்றை நிறுவுவதன் மூலம் உற்பத்தி நிலையத்திலிருந்து மேலும் 130 மெகாவோட் மின் உற்பத்தியை பெற்றுக்கொள்ள முடியும்.
இரண்டாம் கட்டத்தில், விசையாழி அமைக்கப்பட்டதன் பிரதிபலனாக உற்பத்தி நிலையத்திலிருந்து 350 மெகாவோட் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
‘சோபாதனவி’ மின் உற்பத்தி நிலையம் இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் பெரும் பங்களிப்புச் செய்யும். அதன்படி, இந்த மின் உற்பத்தி நிலையம் நாட்டு மக்களுக்கு நிலையான மற்றும் குறைந்த விலையில் வலுசக்தி விநியோகத்தை வழங்குவதோடு, தொழிற்சாலை வளர்ச்சி, வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் உதவும்.
ஒருங்கிணைந்த சுழற்சி செயல்முறை நாட்டின் தற்போதைய மின்சாரத் தேவையில் 12 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு மறைமுகமாகவும் மில்லியன் கணக்கான பொதுமக்களுக்கு நேரடியாகவும் பயனளிக்கும்.
பெயர் பலகையை திரைநீக்கம் செய்து “சொபாதனவி” மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அதன் செயற்பாடுகளை பார்வையிட்ட பின்னர், ஊழியர்களுடன் குழு புகைப்படத்திலும் இணைந்துகொண்டார்.
அனல்மின் நிலையத்தின் முதற் கட்ட உற்பத்தியாக 220 மெகாவோட் மின்சாரம் ஜனாதிபதியினால் தேசிய மின் கட்டமைப்பிற்கு இணைக்கப்பட்டதுடன், இந்த நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் சிறப்பு விருந்தினர்களுக்கான புத்தகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பொன்றையும் இட்டார்.
இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“இந்த உற்பத்தி நிலையத்தை கட்டமைத்த LTL நிறுவனத்தை நான் பாராட்டுகிறேன். LTL நிறுவனம் இலங்கைக்குள் பல மின் உற்பத்தி நிலையங்களை நிறுவியுள்ளது. ‘சொபாதனவி’ திட்டம் மேற்படி நிறுவனத்தின் புதிய வெற்றியாகும்.
2050 காலநிலை மாற்றத் திட்டத்தின் இலக்குகளை அடைய புதுப்பிக்கத்தக்க வலு சக்தி அவசியப்படும். புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தொடர்பில் எமது நிபுணத்துவம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு ஆசிய பிராந்தியத்திலும் ஆப்பிரிக்காவிலும் வெற்றிக்கான வாய்ப்புகளும் உள்ளன.
‘சொபாதனவி’ மின் உற்பத்தி நிலையம் 350 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இலங்கையின் முக்கியமான மின் நிலையமாக மாறி வருகிறது. தற்போது பொருளாதார வளர்ச்சியின் புதிய கட்டத்தைத் தொடங்கியுள்ளோம். மின்சாரம் மற்றும் வலுசக்தி இல்லாமல் இந்த வளர்ச்சி இலக்குகளை அடைய முடியாது. எனவே நாம் அதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும்.
மறைந்த டி.ஜே.விமலசுரேந்திர நீர் மின் உற்பத்திக்கு முன்னுரிமை அளித்ததுடன், சேர் ஜோன் கொத்தலாவல அதற்கேற்ப முன்னோக்கிச் சென்று லக்ஷபான மின் உற்பத்தி நிலைய வளாகத்தை நிர்மாணித்தமை எமக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகும். பின்னர் ஜே. ஆர். ஜயவர்தன ஜயவர்தனவின் கீழ் சுதந்திர வர்த்தக வலயங்களுக்கு மேலதிக மின்சாரத்தை வழங்க மகாவலி மற்றும் சமனலவெவ ஆகிய இரண்டு திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டன. மின்சாரம் கிடைத்திருக்காவிட்டால் ஆடைத் கைத்தொழில்துறை வளர்ச்சி கண்டிருக்காது.
நீர் மின்சார உற்பத்தியின் இறுதி கட்டத்தை எட்டும் வேளையில் உலகளாவிய காலநிலை மாற்றக் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் புதிய வலுசக்தி மூலங்களை கண்டறிய வேண்டியதும் அவசியமாகிறது. புதுப்பிக்கத்தக்க வலுசக்தி என்பது இலங்கை கவனத்தில் கொள்ள வேண்டிய துறையாகும். அதன்படி, இலங்கையை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி சக்தியில் தன்னிறைவடைந்த உற்பத்தியாளராக மாற்ற திட்டமிட்டுள்ளோம்.
அதிகப்படியான வலுசக்திக்கு எப்போதும் கேள்வி இருக்கும். உத்தேச இந்தியா-சிங்கப்பூர் மின் இணைப்புச் செயற்பாடுகள் நடைமுறைக்கு வந்தால், அதற்குள் இணைய வேண்டும். இதுதான் எதிர்காலம். 1977 ஆம் ஆண்டு அரசாங்கம் கீழ் நாட்டின் பிரதான பொருளாதார வளர்ச்சியாக ஆடைத் தொழில்துறை மாறியதைப் போன்று, புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை அடுத்த பத்தாண்டுகளில் நமது வளர்ச்சிக்கான துறையாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
இந்த வலுசக்தி துறை கருத்தில்கொள்ள வேண்டிய துறையாக மாறி வருகிறது. நம்மிடம் இருக்கும் வளத்தைப் பயன்படுத்திக் கொண்டு உச்ச பலனை அடைய வேண்டும். பச்சை ஹைட்ரஜனைக்கு அடுத்தபடியாக முன்னுரிமை அளிக்க வேண்டும். அவுஸ்திரேலியா பசுமை வலுசக்தியில் உலகின் பலவானாக மாறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நமது நாட்டில் சுமார் 50 கிகாவோட் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உள்ளது. அதனை பயன்படுத்துவதில் காணப்படும் தடைகளுக்கு இடமளிக்க கூடாது.
மின் உற்பத்தி நிலையங்களின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தவும், அதற்கான தடைகள் காணப்படும் பட்சத்தில் அவற்றுக்கு விரைவில் தீர்வு காணும் புதிய சட்டங்களை உருவாக்கவும் வேண்டும். இந்த அணுகுமுறை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மட்டுமன்றி, பச்சை ஹைட்ரஜன் துறையிலும் திறனை அதிகரிக்க உதவும்.
பச்சை ஹைட்ரஜனைப் பயன்படுத்த முடிந்தால், கடற்படையினர் பற்றி அதிக கவனம் செலுத்தலாம். அதனால் பச்சை ஹைட்ரஜன் விநியோக மையமாக இலங்கையை மாற்றலாம்.
வலுசக்தி மட்டுமன்றி, தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் வலுசக்தி பெருமளவில் பங்களிக்கும். அனைத்து துறைகளிலும் நாம் தொழில்நுட்பத்தை இணைக்க வேண்டும்.
அதற்காக எமக்கு திறமையான பொறியாளர்கள் மற்றும் நிபுணர்கள் தேவை. எமது சிறந்த திறனாளிகள் பலர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். எனவே அரசாங்கம் நான்கு புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்னை ஐ.ஐ.டி வளாகம் ஒன்றை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
கலஹா பிரதேசத்தில் நிறுவப்படும் இந்த வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்ற எதிர்பார்க்கிறோம். முதலாவது தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தை குருநாகலிலும், இரண்டாவதை சிதாவக்க அல்லது கித்துல்கலவிலும் மூன்றாவது பல்கலைக்கழகத்தை சியானே கோரலையிலும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளோம். அதற்காக பயன்படுத்தக்கூடிய இடங்களை தேடுகிறோம்.
இந்த நான்கு உயர்கல்வி நிறுவனங்கள் உட்பட, பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகங்களின் வசதிகளை விரிவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த முயற்சிகள் அனைத்தும் மற்ற நிறுவனங்களுடன் இணைந்து எதிர்காலத்திற்கு நம்மை தயார்படுத்துகின்றன.
தொழில்நுட்பத்திற்கு அப்பால் செயற்கை நுண்ணறிவிலும் அதிக முதலீடு செய்து வருகிறோம். செயற்கை நுண்ணறிவு கொள்கையை செயல்படுத்துவதோடு, தொழில்நுட்ப மேம்பாட்டு சட்டத்தையும் விரைவில் நிறைவேற்ற எதிர்பார்க்கிறோம்.
தொழில்நுட்பம், பசுமைப் பொருளாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் இலங்கை புதிய வளர்ச்சி யுகத்திற்கு தயாராகும்.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர,
“நீண்ட காலமாக LNG மின் உற்பத்தி நிலையங்களுக்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டாலும், அதை நடைமுறைப்படுத்தவும் நீண்ட காலம் பிடித்தது. இன்று ஒரு திருப்புமுனையாக ‘லக்தனவி’ நிறுவனம் முன் வந்து முதலீட்டுக்கான முயற்சிகளை மேற்கொண்டதுடன் நாட்டில் வலுசக்தி பாதுகாப்பிற்காகவும் மின்சாரத்துறையின் செலவைக் குறைப்பதற்காகவும் இந்த புதிய மின் உற்பத்தி நிலையம் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டில் எத்தனை மணிநேரம் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறதோ அதைவிட அதிகமான மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை இன்று பலர் மறந்துவிட்டனர். 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், இந்த நாட்டில் 16 மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டது. மின் உற்பத்தி நிலையம் இருந்தபோதிலும், மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள், நிலக்கரி மற்றும் பிற பொருட்களை வழங்க முடியவில்லை. மின்சார சபை உட்பட அரச நிறுவனங்கள் பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தன.
மின் கட்டணத்தை அதிகரிப்பது என்பது பிரச்சித்தமான தீர்மானம் அல்ல. ஆனால் ஜனாதிபதி சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுப்பதற்குத் தேவையான தலைமைத்துவத்தையும் வலுவையும் எங்களுக்கு வழங்கினார். அப்போது நாட்டின் தலைவர் என்ற வகையில் அவர் வழங்கிய அறிவுரைகள் மற்றும் வழிகாட்டல்களின் காரணமாக மின்சாரத் துறையின் செலவை ஈடுசெய்யும் விலைச்சூத்திரத்தை செயற்படுத்தி செலவை ஈடுசெய்ய முடிந்தது.
மின்சார சபைக்கு பணம் செலுத்தும் திறன் இல்லாமல், இதுபோன்ற திட்டங்கள் எங்களுக்கு கிடைக்காது. எனவே இன்று இவ்வாறான பாரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. இதனால் அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் எமது மின்சார செலவினங்களை கணிசமான அளவு குறைக்க முடியும்.” என்றார்.
இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டே, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன, மின்சார சபையின் தலைவர் நலிந்த இளங்ககோன், லக்தனவி, சொபதனவி, LTL நிறுவனங்களின் தலைவர்கள், பொறியியலாளர்கள், ஊழியர்கள். மின்சார சபையினர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.