திருப்பதி என்றாலே மதம் கடந்து அனைவருக்கும் நினைவுக்கு வருவது லட்டுதான். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்களுக்கு இலவச தரிசனம், ரூ.300 டிக்கெட், சர்வ தரிசனம் , வி.ஐ.பி தரிசனம் என எந்த டிக்கெட்டுகளில் சுவாமி தரிசனம் செய்தாலும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.
இது தவிர, லட்டு விற்பனைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால், கூடுதலாக லட்டு தேவைப்படும் பக்தர்கள் கவுன்டர்களில் ஒரு லட்டுக்கு ரூ.50 எனக் கட்டணம் செலுத்தி கூடுதலாகப் பெற்றுவந்தனர். இந்த நிலையில், அதிக லட்டு தேவைப்படுபவர்கள், அந்தப் பகுதியில் இருக்கும் இடைத்தரகர்கள் மூலம், கூடுதல் பணம் கொடுத்து லட்டுகளை வாங்கிச் செல்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டிருக்கிறது.
இது குறித்து, இ.ஓ.சி எச்.வெங்கையா சவுத்ரி, “லட்டு வாங்க வரும் பக்தர்கள், சரியான தரிசன டிக்கெட்டை வைத்திருக்க வேண்டும். தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள், 48 முதல் 62 வரை உள்ள கவுன்டர்களை அணுகி, ஆதாரை பதிவு செய்து, சரிபார்த்து, லட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். இந்த புதிய நடவடிக்கை வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்படும். திருப்பதியில் இடைத்தரகர்களின் மோசடி புகார் குற்றச்சாட்டை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.