நிலவுரிமை காக்க போராடும் ஏகனாபுரம் மக்கள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

சென்னை: நிலவுரிமை காக்க போராடும் ஏகனாபுரம் மக்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4,550 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உள்பட 13-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான விளைநிலங்களையும், நீர்நிலைகளையும், குடியிருப்பு நிலங்களையும் கையகப்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 765 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஆனால், போராடும் மக்களின் உணர்வையும், உரிமையையும் சிறிதும் மதிக்காமல் ஆட்சி அதிகாரத் துணைகொண்டு மக்கள் போராட்டங்களை திமுக அரசு ஒடுக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக போராட்டத்தில் ஈடுபட்ட ஏகனாபுரம் பெண்கள், முதியவர்கள், விவசாயிகள் உள்பட பலர் போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் திமுக அரசு பொய் வழக்கு பதிவு செய்துள்ளது.

ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் அறவழியில், போராட்டங்களை முன்னெடுப்பது அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை. அதற்கு அனுமதி மறுத்து திமுக அரசு வழக்கு பதிவதென்பது வெட்கக்கேடானது. மக்களாட்சி, கருத்துச்சுதந்திரம் குறித்து மேடைக்கு மேடை பேசும் திமுகவின் சமூகநீதி இதுதானா? எனவே, ஏகனாபுரம் பொதுமக்கள் மீது எவ்வித வழக்கும் பதியாமல் தமிழக அரசு விடுவிக்க வேண்டும். மேலும் தங்களின் நில உரிமைக்காகப் போராடும் மக்களின் கோரிக்கைக்கு அரசு உடனடியாக செவி சாய்க்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.