ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதித்த ED… வழக்கின் பின்னணி என்ன?!

ஜெகத்ரட்சகன் சொத்துக்கள் முடக்கம்!

கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு தொடர் சர்ச்சையில் சிக்கியவர் ஜெகத்ரட்சகன். மதுபான ஆலை ஒப்புதல் சிக்கல், இவருக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரியில் அரசு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விடக் கூடுதல் கட்டணம் வாங்குவதாக எழுந்த புகார், நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்ட சர்ச்சை, இலங்கையில் முதலீடு என்று பல்வேறு சர்ச்சைகள் ஜெகத்தை வட்டமடித்துக்கொண்டேதான் இருக்கிறது.

எம்.பி ஜெகத்ரட்சகன்

இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜெகத்துக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரம் தகவல் தெரிவித்தன. அதேபோல ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 89.19 கோடி ரூபாய் மதிப்புடைய அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் சென்றது ஜெகத்ரட்சகன் தரப்பு. அதனை தொடர்ந்து சொத்து முடக்கத்தை ரத்து செய்தது நீதிமன்றம்.

அபராதம்!

ரத்து செய்ததை எதிர்த்து நீதிமன்றம் சென்றது அமலாக்கத்துறை தரப்பு. ஜெகத் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்ட விதிகளை மீறி பல்வேறு குற்றங்களைச் செய்திருப்பதாக நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. அதோடு அவர் சிங்கப்பூர், இலங்கை என வெளிநாடுகளில் 51 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்திருக்கிறார் என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வாதாடியது. இந்த விவகாரம் தொடர்பாகவே ஜெகத்ரட்சகனின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

அமலாக்கத்துறை

அதே சமயத்தில், அமலாக்கத்துறை விசாரணையில், சட்டவிரோத பணப் பரிவார்த்தையில் விதிமீறல் ஏற்பட்டதற்கு அபராதமாக 908 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, முடக்கப்பட்ட 89.19 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்து பறிமுதல் செய்யப்படுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ‘உண்மையில் 908 கோடி ரூபாய் அபராதம் என்று கேட்கும்போதே, அய்யோ இவ்வளவு தொகையா என்று கேட்பவரை மலைக்க வைக்கிறது. இன்னொரு பக்கம் ஜெகத்துக்கு 908 கோடி ரூபாய் எல்லாம் ஒரு தொகையா என்று கடந்து செல்லும் உடன்பிறப்புகளையும் காண முடிகிறது. அபராதம் விதிக்கப்பட்ட தொகையை அவர் கணக்கில் உள்ள பணத்திலிருந்து கட்டவேண்டும்’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

என்ன நடந்தது?

எதற்காக அபராதம் என்பது குறித்து அமலாக்கத்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். “ஜெகத்ரட்சகன் விவகாரத்தில் 2020-ம் ஆண்டிலேயே சோதனை நடத்தி 89.12 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டிருந்தன. அடுத்ததாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று பின்னர் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கு தொடர்ந்து நான்கு வருடங்கள் நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுக்குப் பின், ஃபெமா சட்டம் 37ஏ பிரிவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு சிங்கப்பூரில் வெறும் பெயரளவில் மட்டும் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்திடம் 42 கோடி ரூபாய் அளவுக்கு ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் முதலீடு செய்தது கண்டறியப்பட்டது. சிங்கப்பூரைப் போல இலங்கையிலும் 9 கோடி முதலீடு செய்யப்பட்டிருந்தன. இந்த விவகாரங்களின் படியே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அமலாக்கத்துறை அறிக்கை

முதலில் வெறும் சொத்து முடக்கம் மட்டுமே செய்யப்பட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னால் மீண்டும் அமலாக்கத்துறை விசாரணைக்கே இந்த வழக்கு வந்தது. இங்குள்ள நபர்கள் விசாரணை நடத்தி விதிமீறலுக்கு அபராதமும் சேர்த்து விதித்ருக்கிறார்கள். அதிகபட்சமாக பத்து மடங்கு தொகை அபராதமாக விதிக்க முடியும்.

அதன்படியே 908 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த அபராத உத்தரவை எதிர்த்து ஜெகத் தரப்பு அமலாக்கத்துறை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யலாம். அந்த முறையீடு விசாரணை செய்யப்பட்டு அபராத தொகை குறைக்கப்படும் அல்லது நீக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை அபராதத் தொகையை கட்ட சொல்லி உத்தரவு வந்து ஜெகத்ரட்சகன் தரப்பு காட்டவில்லை என்றால் அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் வாய்ப்பிருக்கிறது” என்றார்கள் விரிவாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.