வீரேந்திர சேவாக்கை இந்திய அணியில் இருந்து நீக்கிவிடுவேன் என சவுரவ் கங்குலி மிரட்டியதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் 2003 ஆம் ஆண்டு நடைபெற்றதாகவும், கங்குலி மிரட்டிய அடுத்த போட்டியில் சேவாக் சதமடித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் இந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார் அவர்.
அந்த பேட்டியில் ஆகாஷ் சோப்ரா பேசும்போது, ” சவுரவ் கங்குலி கேப்டனாக இருந்தபோது 2003 ஆம் ஆண்டு ஒருமுறை வீரேந்திர சேவாக்கை மிரட்டினார். அப்போது சேவாக் மோசமாக விளையாடிக் கொண்டிருந்தார். அவருடைய பேட்டில் இருந்து எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் வரவில்லை. தொடர்ந்து ஒன்பது போட்டிகளுக்கும் மேலாக மோசமாக அவுட்டாகிக் கொண்டிருந்தார். நியூசிலாந்து சீரிஸிலும் அவர் ஒழுங்காக ஆடவில்லை. அடுத்த போட்டி மொஹாலியில் நடக்க இருந்தது. அப்போட்டிக்கு முன் சேவாக்கிடம் சென்ற கங்குலி, 9 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட அரைசதம் அடிக்கவில்லை. இனி ரன் எடுக்கவில்லை என்றால் இந்திய அணியில் இருந்து நீக்கிவிடுவேன் என்றார். அடுத்த போட்டி, மொஹாலி டெஸ்டில் சதமடித்த சேவாக் 130 ரன்கள் எடுத்தார்.” என தெரிவித்தார்.
ஆகாஷ் சோப்ராவும் சவுரவ் கங்குலி கேப்டன்சியில் தான் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். 2003 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அவர், கங்குலி மற்றும் சேவாக் இடையே நடந்த இந்த உரையாடலை கேட்டுள்ளார். சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தை இப்போது பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
ஆகாஷ் சோப்ரா இந்திய அணிக்காக மொத்தம் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். சச்சின் காயமடைந்ததால் இந்திய அணியில் சேவாக்குடன் ஓப்பனிங் இறங்கினார். மொத்தம் 437 ரன்கள் டெஸ்ட் போட்டியில் எடுத்தார். 7 ஐபிஎல் போட்டிகளில் ஆடியிருக்கும் அவர், 53 ரன்களும் அதிகபட்சமாக 24 ரன்களும் எடுத்திருக்கிறார். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு முழுநேர கிரிக்கெட் பிராட்காஸ்டராக மாறினார். ஸ்டார்ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சேனல்களில் வர்ணனையாளராகவும் உள்ளார். கங்குலி கேப்டனாக இருந்தபோது தான் இந்திய அணிக்கு யுவ்ராஜ் சிங், முகமது கைப் உள்ளிட்ட பல இளம் கிரிக்கெட் வீரர்கள் அறிமுகமானார்கள். அந்த வரிசையில் ஆகாஷ் சோப்ராவும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரராகும் வாய்ப்பை கங்குலி கொடுத்தார்.