ராமேசுவரம்: காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று (ஆக.30) இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன.
போர், அரசியல், வன்முறை மற்றும் பிற காரணங்களால் உலகம் முழுவதும் காணாமல் ஆக்கப்பட்ட பல லட்சக்கணக்கானோர் பற்றிய தகவல்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம் குறித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆகஸ்ட் 30-ம் தேதியை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக ஐநா கடந்த 30.08.2011 அன்று பிரகடனப்படுத்தியது. அதுமுதல் ஆகஸ்ட் 30-ம் நாளானது உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் காணாமல் ஆக்கப்ட்டோர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியின் போது பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி ராணுவத்தில் சரணடைந்த பலரும் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கங்கள் சார்பாக பேரணி நடைபெற்றது.
யாழ்ப்பாணம் ஸ்டாலின் வீதியில் துவங்கிய பேரணி, முனியப்பர் ஆலையம் வரையிலும் நடைபெற்றது. இந்தப் பேரணியில் இலங்கையில் வட மாகாணத்தின் மன்னார், யாழ்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். அதுபோல, யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு முன்னால், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நீதி வேண்டி பல்கலைக்கழக மாணவர்கள், வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம் நடத்தினர்.
2,750-வது நாளாக நடைபெற்ற போராட்டம்: வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சார்பாக தொடர் சுழற்சி முறையிலான 2,750-வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் தபால் நிலையம் எதிரே இன்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டோர் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக சர்தேச விசாரணை வேண்டும், என வலியுறுத்தி கையில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கிழக்கு மாகாணம் திருகோணமலையில் போலீஸாரின் தடையை மீறி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் சார்பாக கடற்கரையில் போராட்டம் நடைபெற்றது.
மேலும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் ஐநாவின் மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “இலங்கையில் யுத்த காலகட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர்கள் தொடர்பாக ஐநாவின் மனித உரிமைகள் அலுவலகம் போதுமான ஆவணங்களைத் திரட்டியுள்ளது. இலங்கையில் வசிப்பவர்களும், யுத்தத்தினால் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்பவர்களும் சாட்சியம் அளித்துள்ளனர். அதில் சர்வதேச நீதி விசாரணையை கோரி உள்ளனர்.
அது போல, முன்னாள் ஐநா ஆணையாளர் மிசேல் பசேலெட், காணாமல் ஆக்கப்ட்டோர் தொடர்பாக இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்தார். இதை ஐநாவின் முன்னாள் ஆணையாளர்கள் பலரும் வழிமொழிந்திருந்தனர். எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஐநாவின் தலைமையில் சர்வதேச நாடுகளின் விசாரணை வேண்டும், என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.