போலியோ சொட்டு மருந்து முகாமுக்காக காசாவில் 3 நாள் போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல்

டெல் அவில்: போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் போர் இடைநிறுத்தத்துக்கு இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து (polio vaccine) கொடுப்பதையொட்டி மூன்று நாட்கள் மட்டும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் காசாவில் போலியோ நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது, போர் காரணமாக தடுப்பூசி விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கிறது. மனிதாபிமானத்தின் அடிப்படையில் போர் நிறுத்தத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஐநா சார்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, பல்வேறு பகுதிகளில் மூன்று நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் என இரு தரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

முதலில் மத்திய காசா பகுதி, பின்னர் தெற்கு காசா, அதன்பிறகு வடக்கு காசா என போலியோ சொட்டு மருந்துகள் வழங்கப்படும். இந்த மூன்று நாட்களில் காசா பகுதி முழுவதும் சுமார் 6.4 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்தை ஐநா சுகாதார ஊழியர்கள் மற்றும் பிற உள்ளூர் சுகாதார ஊழியர்கள் செலுத்துவார்கள். போலியோ சொட்டு மருந்து கொடுக்க 2,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் என்று உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி ரிக் பீபர்கார்ன் தெரிவித்துள்ளார்.

காசா பகுதியில் உள்ள 650,000-க்கும் அதிகமான பாலஸ்தீன குழந்தைகளுக்கு சேவை செய்து, அவர்களை பாதுகாப்பதற்கு சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று ஹமாஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இது போர் நிறுத்தம் அல்ல…. மூன்று நாட்களுக்கு மட்டும் போர் ‘இடைநிறுத்தம்’ செய்யப்படுகிறது” எனத் திட்டவட்டமாக தெரிவித்தார். மூன்று நாட்களுக்குள் இந்தப் பணியை முடிக்க முடியாமல் போனால், மேலும் ஒரு நாள் தேவைப்படலாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் தனது அதிகார பலத்தை அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது காட்டி வருவதால், அவர்கள் தங்களது இன்னுயிரை துறந்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், பெண்கள் இறந்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் 40,602 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 93,855 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களின் போது இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் போர் தொடங்கியதிலிருந்து அதிகப்படியான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்த மக்களுக்கு அடிப்படை தேவைகளான உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்டவை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே தொற்று நோய்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேவேளை, காசா குழந்தைகளிடையே நோய் பரவல் தொடங்கியுள்ளதாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.