வாஷிங்டன்: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, செப்டம்பர் 8-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிடோர்டா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதன்முறையாக அமெரிக்கா செல்ல உள்ளார். ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயணம் குறித்த விவரங்களை வெளியிட்ட சாம் பிடோர்டா, “இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் 32 நாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் தலைவராக நான் இருக்கிறேன். ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக ஆன பிறகு, பல்வேறு நாடுகளில் இருந்து அவருக்கு அழைப்புகள் வருகின்றன. வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள், ராஜதந்திரிகள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், தலைவர்கள், ஊடகங்கள் உள்ளிட்டோர் ராகுல் காந்தியுடன் கலந்துரையாட விரும்புகின்றனர். அதற்காக அவர் தங்கள் நாட்டுக்கு வருகை தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்போது ராகுல் காந்தி, குறுகிய பயணமாக அமெரிக்காவுக்கு வர உள்ளார். அவர் செப்டம்பர் 8 ஆம் தேதி அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகருக்கு வருகை தருகிறார். செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் வாஷிங்டன் டிசியில் இருப்பார். டல்லாஸில், டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்கள், கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்டோரை ராகுல் காந்தி சந்திக்க இருக்கிறார்.
அடுத்த நாள், ராகுல் காந்தி வாஷிங்டன் டிசிக்கு செல்வார். அங்கும் சிந்தனையாளர்கள், தேசிய பத்திரிக்கையாளர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு நபர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாட உள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதை நாங்கள் காண்கிறோம். இதைக் கருத்தில் கொண்டு பல்வேறு நபர்களுடன் அதிக நிகழ்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. ராகுல் காந்தியின் இந்த பயணம் மிகவும் வெற்றிகரமானதாக இருக்கும் என்று நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்று கூறினார்.