சென்னை பிராட்வேயில் ரூ.822 கோடியில் மல்டி மாடல் பேருந்து முனையம்… சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னையின் பழைய பிராட்வே பேருந்து நிலையம், குறளகம் கட்டடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் சுமார் ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் பல்வேறு போக்குவரத்து இணைப்புகளுடன் கூடிய பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகத்தை (Multi Modal Facility Complex) தமிழ்நாடு அரசு அமைக்கவிருக்கிறது. இதற்கான நிர்வாக அனுமதியை வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியீட்டிருக்கிறது.

பிராட்வே பேருந்து நிலையம்

சென்னையின் மிகப் பழைமையான பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் இருந்துவருகிறது. 1964-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்த இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து, ஆரம்ப காலகட்டத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் தொடங்கி பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. 2002-ம் ஆண்டுக்குப் பிறகு, போக்குவரத்து நெரிசல், இடப்பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களால் பிராட்வேயிலிருந்து தென்மாவட்டங்கள் உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பேருந்து பயண சேவைகள், அப்போது புதிதாக கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து, பிராட்வே பேருந்து நிலையத்தில் பெரும்பாலும் மாநகரப் பேருந்துகள்(MTC) மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, தாம்பரம், கிளாம்பாக்கம் என சென்னை மாநகருக்குள்ளாகவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், பிராட்வே பேருந்து நிலையம் அருகில் ரயில் நிலையம், நீதிமன்றம், குறளகம், வணிக வளாகங்கள், பஜார், சந்தைகள் என மக்கள் கூடும் இடமாக நகரின் முக்கியப் பகுதியாக பாரிமுனை இருப்பதால், நாளொன்றுக்கு சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளை கையாளும் பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துவருகிறது. அதேசமயம் இந்த பேருந்து நிலையம் சரிவர பராமரிக்கப்படாமல், நவீன வசதிகள் மேற்கொள்ளப்படாமலும் கைவிடப்பட்டதால் பொலிவிழந்து, அடிப்படை வசதிகளே மோசமான நிலையில் இருக்கும் சூழலுக்கு உள்ளானது. அடிப்படை வசதிகள், இடநெருக்கடி உள்ளிட்ட பிரச்னைகளையெல்லாம் சரிசெய்து, பிராட்வே பேருந்து நிலையத்தை நவீன முறையில் மேம்படுத்தவேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பாப்ஹேம்’ஸ் பிராட்வே

இந்தநிலையில்தான், சென்னை மாநகராட்சியில் பிராட்வே பேருந்து நிலையத்தில் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் Multi Modal Facility Complex (MMFC) அமைப்பதற்கு ரூ.822.70 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதுடன், தற்போது அதற்கான நிர்வாக அனுமதியும் வழங்கியிருக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் பல்வேறு சிறப்பம்சங்கள் விளக்கிக் கூறப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, “பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் புறநகர் இரயில்களில் பயணிப்பதற்கும், மெட்ரோ இரயிலில் எளிதில் பயணிப்பதற்கும் ஏதுவாக அமைந்துள்ள கோட்டை இரயில் நிலையம் மற்றும் குறளகம் ஆகியன அருகருகே அமைந்துள்ள நிலையில், இந்த வசதிகளின் பயன்கள் அனைத்தையும் சீரான மற்றும் எளிதான வகையில் (Seamless and Easy connectivity) பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் ஒருங்கிணைந்த வசதிகளை கொண்ட பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து வளாகத்தை உருவாக்குவதென அரசு முடிவு செய்துள்ளது.

குறளகம்

இதன் தொடர்ச்சியாக, போக்குவரத்திற்கும், பயணிகளுக்கும் மேலும் கூடுதல் வசதிகள் கிடைக்கும் வகையிலும், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்திற்கு (TNKVIB) மேலும் பயனுள்ளதாக அமையும் வகையிலும், பிராட்வே பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே உள்ள தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்திற்கு சொந்தமான சற்று பழுதடைந்துள்ள குறளகம் கட்டிடத்தையும் இடித்து இத்திட்டத்துடன் இணைத்து பெரிய பேருந்து நிலையமும், வணிக வளாகமும் கட்டுவதற்கு தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் (TNIDB) ஆலோசனை வழங்கியது.

இதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சி மூலம், சென்னை பிராட்வேயில் உள்ள குறளகத்தை உள்ளடக்கிய பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் Multi Modal Facility Complex (MMFC) அமைக்க ரூ.822.70 கோடிக்கான திருத்திய நிர்வாக அனுமதியை வழங்கி முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இத்திட்டச் செயலாக்கம், இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகள், ‘சென்னை மெட்ரோ அசட் மேனேஜ்மெண்ட் லிமிடெட்’ (CMAML) என்ற ஒரு புதிய சிறப்பு நோக்கு நிறுவனம் (Special Purpose Vehicle) மூலம் மேற்கொள்ளப்படும்.

பிராட்வே பேருந்து நிலையம்

இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீட்டில், தமிழ்நாடு அரசு, பேருந்து நிலைய திட்டப் பகுதிக்கு பற்றாக்குறை நிதியாக (Viability Gap Fund) ரூ. 200.84 கோடி வழங்கும். நடைபாதை மற்றும் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதிக்காக (Multi Modal Integration) பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ரூ.115.03 கோடியை, பத்தாண்டுகளுக்கு பின்னர் திருப்பி செலுத்த தொடங்கத்தக்க வகையிலான (10 years Moratorium) சலுகைக் கடனாக (Soft Loan), சென்னை பெருநகர வளர்ச்சி முகமை (CMDA) வழங்கும். மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ரூ.506.83 கோடியை, காலம் சார்ந்த கடனாக (Term Loan) தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (TUFIDCO) வழங்கும்.

எப்படி அமையப்போகிறது பிராட்வே பேருந்துநிலையம்? சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்த பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம், 2 அடுக்கு பேஸ்மெண்ட் அடித்தளம், 2 அடுக்கு பேருந்து நிறுத்தம், 6 அடுக்கு வணிக பயன்பாடு என மொத்தம் 10 அடுக்குகளை கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்தை பயன்படுத்த இருக்கும் பேருந்துகளின் எண்ணிக்கை சுமார் 1,100 ஆகும். ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையமானது, பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு எளிதான, சீரான அணுகும் வசதி – பல்வேறு நுழைவாயில்கள் வழியாக உள்நுழையும் வசதிகள், ஆட்டோ மற்றும் டாக்ஸிக்கான ஒருங்கிணைந்த வசதி (Para transit), சுமார் 470 கார், இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதி, மின்சார பேருந்துகளுக்கான மின்னேற்றம் செய்யும் (charging) வசதி, CMRL நுழைவாயில் உடன் இணைப்பு (Multi Modal Integration), கோட்டை புறநகர இரயில் நிலையத்துடன் இணைப்பு (ஸ்கைவாக்), NSC போஸ் சாலையை கடப்பதற்கான இணைப்பு, குடிநீர் மற்றும் நவீன கழிவறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும்.

புதிய பிராட்வே பேருந்துநிலையம் மாதிரி படம்

இந்த பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலைய வசதியானது, பொதுமக்களுக்கு பெருமளவில் பயனளிக்கும் வகையில், மேலும் எளிதான, சீரான, நவீன, வசதியை வழங்கும். சென்னை மாநகரின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான அரசின் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களில் இத்திட்டமானது ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்கும்!” என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.