காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தின் தீவிரத்தை குறைக்க, பகுதி பகுதியாக நிலத்தை கையகப்படுத்த அறிவிப்புகளை அரசு சார்பில் வெளியிட்டு வருகின்றனர். இந்தத் திட்டத்துக்காக மொத்தமாக கையகப்படுத்த உள்ள ஏகனாபுரத்தில் ஒரு பகுதி நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து அந்தப் பகுதி மக்கள் செப்டம்பர் 3-ல் கூடி ஆலோசிக்க உள்ளனர்.
சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக சுமார் 5300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முழுவதும் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை மொத்தமாக வெளியிடமாமல் பகுதி பகுதியாக அரசு சார்பில் வெளியிட்டு வருகின்றனர். இது மக்கள் மொத்தமாக ஒன்றிணைந்து போராடுவதை தடுப்பதற்கான யுக்தி என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்த ஏகனாபுரத்தில் செப்டம்பர் 3-ம் தேதி இது தொடர்பாக கூடி ஆலோசிக்க உள்ளனர். இது குறித்து பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் செயலர் க.சுப்பிரமணியன் கூறுகையில், “வரும் 3-ம் தேதி அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்க உள்ளோம். எங்கள் போராட்டத்துக்கு ஆதரவளித்து வரும் நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்டோரை எங்கள் பகுதிக்கு அழைத்து வந்து போராட்ட்தை தீவிரப்படுத்துவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும்.
ஏகனாபுரத்துக்கு நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வந்து போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஆட்சியர் தரப்பில் பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையாக வெளியில் சென்றிருந்தால் எங்களால் அங்கு செல்ல முடியவில்லை” என்றார்.