Doctor Vikatan: என் வயது 36. சில மாதங்களில் எனக்கு இரண்டு முறை பீரியட்ஸ் வருகிறது. அதை சாதாரணமாகக் கடந்து போவதா அல்லது பிரச்னையின் அறிகுறி என எடுத்துக்கொள்வதா என்று தெரியவில்லை. இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்… சிகிச்சை தேவையா என விளக்க முடியுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
மாதம் ஒரு முறை 28 நாள்கள் முதல் 32 நாள்கள் இடைவெளியில் பீரியட்ஸ் வருவது இயல்பானது. அதுவே சில பெண்களுக்கு ஒரே மாதத்தில் இரண்டு முறை பீரியட்ஸ் வரலாம். அதாவது மாதத்தின் ஆரம்பத்தில் ஒருமுறையும் மாத இறுதியில் இன்னொரு முறையும் பீரியட்ஸ் வரலாம்.
இப்படி வரும் பீரியட்ஸானது 22 – 23 நாள்கள் சுழற்சியில் ஒவ்வொரு மாதமும் வருகிறது என்றால் அது நார்மலானது. சிலருக்கு 15-ம் நாள் அல்லது 16-ம் நாள் மறுபடி ஸ்பாட்டிங் என்று சொல்லக்கூடிய லேசான மாதவிடாய் வரும். ஆனால், இந்த ஸ்பாட்டிங்கானது நார்மல் பீரியட்ஸ் போல இல்லாமல், இரண்டு நாள்கள் மட்டும் ப்ளீடிங் இருக்கும் அல்லது லேசான திட்டுகளாக வெளிப்படும். இது ‘ஓவுலேஷன் ப்ளீடிங்’ (Ovulation Bleeding) ஆகவும் இருக்கலாம்.
அதாவது, 28 நாள் சுழற்சி உள்ள பெண்களுக்கு முதல் 4 – 5 நாள்களுக்கு ப்ளீடிங் ஆகும். பிறகு அவர்களுக்கு ஒரு கருமுட்டை தேர்வாகி வளர்ந்து வெளியே வர வேண்டும். அதைத்தான் ‘ஓவுலேஷன்’ அதாவது ‘அண்டவிடுப்பு’ என்று சொல்கிறோம். இந்த நிகழ்வானது ஒவ்வொரு பீரியட்ஸிலும் நடைபெறும். ஒரே சினைப்பையிலிருந்தோ, இரண்டிலுமிருந்து மாறி மாறியோ கூட இது நிகழலாம். சில நேரங்களில் ஒரு முட்டையும், அரிதாக சில நேரங்களில் இரண்டு முட்டைகளும் ரிலீசாகலாம். அப்படி முட்டை ரிலீசாகி, உயிரணுவுடன் இணையும்போதுதான் கருத்தரிக்கும் வாய்ப்பு அமைகிறது. முட்டை ரிலீசாகி, கர்ப்பப்பைக்குள் வரும்போது, சிலருக்கு ப்ளீடிங் ஏற்படலாம். இதைத்தான் ‘ஓவுலேஷன் ப்ளீடிங்’ என்று சொல்கிறோம். இது குறித்து பயப்பட வேண்டியதில்லை.
அதுவே, சாதாரண ப்ளீடிங் மாதிரியே நான்கைந்து நாள்களுக்கு ரத்தப்போக்கு இருந்தால், அது சாதாரணமானதல்ல. கர்ப்பப்பை, சினைப்பை போன்றவற்றில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என டெஸ்ட் செய்ய வேண்டியது அவசியம். ஹார்மோன் டெஸ்ட்டும் தேவைப்படலாம். தைராய்டு பாதிப்பு உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
மாதவிடாய் சுழற்சியை பாதிப்பதில் ஸ்ட்ரெஸ்ஸுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஸ்ட்ரெஸ் அதிகமாக இருக்கும்போது மாதவிடாய் தள்ளிப்போகலாம் அல்லது சீக்கிரமே வரலாம். அதுவும் நார்மலானதுதான். பத்தாவது மற்றும் ப்ளஸ் டூ தேர்வுகளுக்கு முன் ஸ்ட்ரெஸ்ஸின் காரணமாக சில பெண்கள் இதை எதிர்கொள்வார்கள். அது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.