லாகூர்,
சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
சமீப காலங்களாகவே தடுமாறி வரும் அந்த அணி கடந்த வருடம் பாபர் அசாம் தலைமையில் 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விகளுக்கு பொறுப்பேற்று தம்முடைய பதவியை ராஜினாமா செய்த பாபர் அசாம் மீண்டும் இந்த தொடரை முன்னிட்டு கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் இந்த தொடரிலும் அவருடைய தலைமையில் சுமாராக விளையாடிய பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனால் அவருடைய கேப்டன்ஷிப் மீது மீண்டும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஏனெனில் பாகிஸ்தான் பேட்டிங் துறையின் முதன்மை வீரராக போற்றப்படும் அவர் சமீப காலமாகவே கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் மோசமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் உலகம் முழுவதிலும் அசத்தும் விராட் கோலியை சொந்த மண்ணிலேயே சுமாராக விளையாடும் பாபர் அசாம் நெருங்கக் கூட முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார். எனவே விராட் கோலியுடன் அவரை ஒப்பிடுவதை பாகிஸ்தான் ரசிகர்கள் மறந்து விட வேண்டும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “யார் அவர்களை ஒப்பிடுகிறார்கள்? ரசிகர்கள் இப்படி ஒப்பிடுவதைக் கேட்டு நான் ஓய்ந்து போய் விட்டேன். ஒப்பிடுவதற்கு முன் முதலில் நீங்கள் விராட் கோலி எவ்வளவு ரன்கள் அடித்துள்ளார் என்பதை பார்க்க வேண்டும். உலகம் முழுவதிலும் ரன்கள் குவித்துள்ள அவர் மகத்தான பிளேயர். அவருடைய அந்தஸ்தை பாருங்கள். களத்திற்குள் வரும்போது விராட் கோலியிடம் வித்தியாசமான ஒளி இருக்கும்.
ஆனால் பாபர் அசாம் அவரை நெருங்க கூட முடியாது. எனவே இந்த ஒப்பீடுகளை மறந்து விடுங்கள். அவர்களை ஒப்பிடுவதில் எனக்கு நிறைய கேள்வி இருக்கிறது. அதனாலேயே நான் எப்போதும் அவர்களை ஒப்பிட்டதில்லை. ஒப்பிடுவதற்கு முன் இருவருடைய புள்ளி விவரங்களை பாருங்கள். வேண்டுமானால் இருவரும் ஓய்வு பெற்ற பின் அவர்களுடைய புள்ளி விவரங்களை பார்க்கலாம்” என்று கூறினார்.