‘ஜெய்பீம்’ படம் வெளியான தருணத்தில், “நானும் இந்நேரம் நடிகனாகியிருப்பேன்!” – இது `பீம்சிங்’ ஸ்டூடியோ செங்கேணியின் கதை!’ என்கிற தலைப்பில் விகடன் தளத்தில் வெளியாகியிருந்தது ஒரு கட்டுரை.
சென்னை வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகேயுள்ள அரசு உதவி பெறும் சிங்காரம் பிள்ளை ஆரம்பப் பள்ளியில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்த மணியின் கதை அது. மணியின் இயற்பெயர் ‘ஜெய்பீம்’ கதை நாயகியின் கேரக்டர் பெயரான செங்கேணி.
தன்னுடைய பதின்ம வயதுகளில் தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குநர் பீம்சிங்கின் நியூட்டன் ஸ்டூடியோவில் ‘செங்கேணி’யாக ஆபிஸ் பாய் வேலைக்குச் சேர்ந்தவர், அங்கிருந்து ‘மணி’யாக வெளியேறியது தொடங்கி, வில்லிவாக்கம் பள்ளிக்கூடத்துக்கு வந்தடைந்தது, அங்கு மனைவிக்குச் சத்துணவு சமைக்கும் வேலை வாங்கியது, பின் மனைவியின் திடீர் மறைவு, தொடர்ந்து வேலைநேரம் போக மீதி நேரத்துக்குப் பள்ளிக்கூடமே வீடாகிப் போனது எனத் தன் அதுவரையிலான மொத்த வாழ்க்கையையும் கட்டுரையில் பேசியிருந்தார் மணி.
மேற்படி பள்ளிக்கூடம் அமைந்திருக்கும் வில்லிவாக்கம் மார்க்கெட் பகுதியில் இவரைத் தெரியாதவர்களே இல்லை என்றாகிப் போன சூழலில், பள்ளியில் நிகழ்ந்த ஒரு சம்பவம் ஒரே நாளில் மணியின் நாற்பதாண்டு பள்ளி வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்து விட, ஒரு தீபாவளிக்கு முந்தைய நாள் மாலை மணியின் துயரக் கதையைப் பதிவு செய்திருந்தோம்.
பள்ளிக்கூட வேலை போய் விட்டதால், ஒரு மாதம் காஞ்சிபுரம் அருகே வசிக்கும் பெரிய மகள் வீட்டிலும் மறு மாதம் வில்லிவாக்கத்திலேயே வசிக்கும் சின்ன மகள் வீட்டிலுமாக நாள்களைக் கழித்து வந்த நிலையில், பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் அடிபட்டு நடக்க முடியாமல் போய் காஞ்சிபுரத்திலேயே தங்க வேண்டிய சூழல் உருவானதோடு கட்டுரையை முடித்திருந்தோம்…
“ஒரு தடவை என்னை லெனின் (எடிட்டர்) சார்கிட்ட கூட்டிட்டுப் போங்களேன், பார்க்கணும்போல இருக்கு. நேர்ல பார்த்தா அவர் என்னை ஞாபகம் வச்சிருப்பார்” என்ற அவரது கோரிக்கை நிறைவேற வேண்டும் என்றெல்லாம் வாசகர்கள் பலர் தங்களது விருப்பங்களைப் பதிவு செய்திருந்த நிலையில்…
தீபாவளி முடிந்து மூன்று மாதங்கள் இருக்கும், திடீரென ஒரு அலைபேசி அழைப்பு. ‘மணி பேசறேன், வில்லிவாக்கம் வந்துட்டேன். டெய்லர் கடையிலதான் இருக்கேன். சாயந்திரம் வர்றீகளா’ என்றார். சிங்காரம் பிள்ளை பள்ளி இருக்கும் தெருவில் நாலு வீடு தள்ளி இருக்கிறது அந்த டெய்லர் கடை. அன்று மாலையே சென்றேன். வழக்கமாகச் செல்லும் பாண்டியன் ஹோட்டல் போய் பரோட்டா சாப்பிட்டோம்.
‘கால் சரியாச்சா, அங்கேயே இருக்க வேண்டி தானே? கொஞ்சம் குணமான பிறகு வந்திருக்கலாம்ல’ என்றேன்..
”பொண்ணு வீட்ல கொஞ்ச நாள்தான் இருந்தேன். வாடகை வீடுங்கிறதால ஓனர் ஏதாச்சும் சொல்வார்னு ஏரிக்கரை வீட்டுல கொண்டு போய் விட்டுட்டாக. மழை காலத்துல தண்ணி வந்துடுதுனு அவுகளே அந்த வீட்டை விட்டுட்டு ஊருக்குள்ள வந்து குடியிருக்காக. அந்த வீட்டுக்குள் பாம்பெல்லாம் வருமாம். கரன்ட்டும் இல்ல. அங்க எப்படி இருக்க முடியும்? ரெண்டு ராத்திரி இருந்தேன். என்னால முடியலை சோறு கொண்டு வந்த பேரன்கிட்ட ‘என்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்கடா’னு சொன்னேன். அவன் அவங்கம்மா அப்பாகிட்டச் சொன்னானானு தெரியலை. ஒதுக்குப்புற வீட்டுல என்னை விட்டதோட சரி, எட்டிக்கூடப் பார்க்கலை பொண்ணு.
ஒரு வாரத்துல கால் கொஞ்சம் சரியானதும் ஒரு கம்பை ஊணிக்கிட்டு நானே அங்கிருந்து வெளியேறி காஞ்சிபுரம் வந்து ஒருவழியா இங்க வந்துட்டேன்” என்றார்.
சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விட்டார் என அன்றுடன் பெரிய மகள் பேச்சை நிறுத்தி விட்டார்.
ஒரு வாரம் கழித்து மறுபடியும் வில்லிவாக்கம் சென்றபோது அதே டெய்லர் கடையில் அமர்ந்திருந்தார். பார்த்தவுடன் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
”அவருக்கு வில்லிவாக்கத்தை விட்டுப் போக மனசே இல்லை. சின்ன மக வீட்டுக்குப் போயிருக்கார். ‘இங்கேயே தங்கறதுன்னா என் புருஷன் சம்மதிக்க மாட்டான்’னு அந்தப் பொண்ணும் சொல்லிடுச்சாம். இப்ப நைட்டும் பகலும் இந்தக் கடை வாசல்லயே கிடக்கார். பத்து வீடு தள்ளி ஒரு வீட்டுல வேலை செய்யற கூடப் பிறந்த தங்கச்சியாலயும் எதுவும் செய்ய முடியலை. அதுவே வீட்டோட தங்கியிருந்து வேலை பார்த்திட்டிருக்கு. மதியம் ஒருவேளை அதுக்குக் கிடைக்கிற சாப்பாட்டுல கொஞ்சத்தைக் கொண்டு வந்து கொடுத்துட்டுப் போகுது. பகல்ல பிரச்னை இல்லை. ராத்திரி மழை பெய்ஞ்சா இங்கன உட்காரக்கூட முடியாது, எப்படிப் படுத்துக் கிடக்கார்னு தெரியலை. நமக்கும் என்ன செய்யறதுன்னும் தெரியலை.” என்றார் டெய்லர் முத்து.
ஆறுதலாக கொஞ்ச நேரம் பேசிவிட்டு டிபன் வாங்கிக் கொடுத்துவிட்டு வந்தேன்.
பத்து நாள்கள் சென்றிருக்கும். ஒரு நாள் போன் செய்தார் இங்க பக்கத்துல இருக்கிற ஒரு அம்மா, ஆவடியில ஒரு ஸ்கூல் நடத்துறாங்க. அங்க வேலைக்குக் கூப்பிட்டிருக்காங்க. பள்ளிக்கூடத்துலயே தங்கிக்கலாம்னு சொல்லியிருக்காங்க. நாளைக்குக் கிளம்பறேன்’ என உற்சாகமாகச் சொன்னார். ‘போயிட்டு வாங்க மணியண்னே, லீவு விட்டாக்கூட இங்க வர வேண்டாம், நானும் முத்துவும் வந்து பார்க்கறோம்’ என்றேன்.
‘ஆமாமா… ரெண்டு பொண்ணுகளும் இப்படி இருப்பாங்கனு நினைக்கவே இல்லை. ஒருவேளை நான் செத்தாக்கூட இந்தத் தெருவுல இருக்கிற நாலு பேர்தான் வந்து எடுத்துப் போடணும்’ என்றபடி ஆவடி கிளம்பிப் போனார்.
சுமார் மூன்று மாதங்கள் ஆவடியிலிருந்திருப்பார். அருகிலுள்ள யாரிடமாவது போன் வாங்கி இரண்டொரு முறை போன் பண்ணியிருந்தார். வேலைப்பளு காரணமாக என்னாலும் சென்று பார்க்க இயலவில்லை.
ஆகஸ்ட் முதல் தேதி மாலை முத்துவிடமிருந்து போன். ‘மணி வந்திருக்கார். வர்றீகளா’ என்றார், சென்றேன்.
”சம்பளம்னு முழுசா எதுவும் தரலை. அப்பப்ப நூறு இருநூறுன்னு தருவாங்க. ஸ்கூல் லீவுன்னா பள்ளிக்கூடத்துல தங்கக் கூடாதுனு சொல்றாங்க. மாடி ஏறி ஏறி இறங்கிறதுல அடிபட்ட கால்ல திரும்பவும் வலி. அதைச் சொன்னா நாலு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வா’னு சொல்லிட்டாங்க. எங்க அங்கேயே செத்துப் போயிடுவேனோன்னு அவங்களுக்குப் பயம் வந்திடுச்சு. அதனால இனி அங்க போறதா இல்லையானு தெரியலை.” என்றார்.
மீண்டும் அதே தெருவோர வாழ்க்கை. முதியோர் இல்லம் எதிலாவது சேர்த்து விடலாமென யோசித்தோம். ‘அவர் மருமகன் ஒரு மாதிரி. யாரைக் கேட்டுச் சேர்த்தீகன்னு சண்டைக்கு வந்தா என்ன செய்யறது?’ என்றார் முத்து. யோசனையிலேயே ஒரு வாரம் சென்றது.
இதற்கிடையில் எடிட்டர் லெனினிடம் நண்பர் ஒருவர் இவர் குறித்த தகவலைச் சேர்க்க, ‘நல்லா ஞாபகம் இருக்கே. கூட்டிட்டு வர ஏற்பாடு செய்யுங்க. அல்லது நாமே போய்ப் பார்க்கலாம்’ எனச் சொல்லியிருக்கிறார் அவர்.
ஆகஸ்ட் 15… நாட்டின் சுதந்திர தினம். காலை பத்து மணிக்கு முத்துவிடமிருந்து போன்.
”நடக்க முடியாம இங்கேயே கிடக்கார்னு பக்கத்துல யாரோ போலீஸுக்குப் போன் செய்திருக்காங்க. வில்லிவாக்கம் ஸ்டேஷன்ல இருந்து கூட்டிட்டுப் போக வந்திருக்காங்க” என்றார். போனை வாங்கிப் பேசிய மணி, ‘ஏதோ ஹோம்ல கொண்டு போய் விடப் போறாங்களாம். இப்பக்கூட சின்னப் பொண்ணு வந்து பார்க்கலை. தங்கச்சிகிட்ட ‘எனக்கு யாருமில்லை’னு எழுதி வாங்கிட்டாங்க. எங்க கூட்டிட்டுப் போறாங்கனு தெரியலை. நீங்க வந்து பார்ப்பீங்களா’ எனத் தழுதழுத்த குரலில் பேசினார்.
கூப்பிட வந்த காவலரிடம் பேசினேன். ‘சார் எங்க கூட்டிட்டுப் போறாங்கனு சொல்வாங்க. அவர் கிட்ட நாலஞ்சு போன் நம்பர் இருக்கு. உங்க நம்பரும் இருக்கு. அதனால உங்களுக்கும் சொல்வாங்க சார்’ எனச் சொல்லிவிட்டுப் போனை கட் செய்துவிட்டார்.
மறுநாள் முத்துவுக்குப் போன் போட்டு விசாரித்தேன். `கொளத்தூரில் ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்திருக்கிறார்களாம். போன் நம்பர் தந்திருக்காங்க. நாம ஒரு நாள் போயிட்டு வரலாம். ஆனா ஆட்டோவுல ஏறப்பவே மனுஷன் பாதி ஆளாகிட்டார்’ எனச் சொன்னார்.
மூன்றாவது நாள் அதாவது பதினெட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை. ஒரு புது நம்பரிலிருந்து போன். மணியேதான். எடுத்ததுமே அழ ஆரம்பித்து விட்டார். `நீங்க பார்க்க வரலையே’ என்றவரிடம், ‘அடுத்த ஞாயிறு நிச்சயம் வருகிறேன்’ எனச் சொன்னேன்.
‘என்னால இனி வில்லிவாக்கம் வர முடியாதுபோல. இங்க நல்லா கவனிச்சிக்கிடுறாங்க. ஆனா வெளியில விட மாட்டாங்களாம். நீங்களா வந்தாத்தான் உண்டு. வருவீங்களா’ என்றார்.
உறுதியளித்து வைத்தேன்.
சென்ற சனிக்கிழமை மாலையே முத்து போன் பண்ணினார். ‘ரெண்டு பேரும் நாளைக்குப் போயிட்டு வருவோம். பிள்ளைக, தங்கச்சியெல்லாம் போக வாய்ப்பிலை’ என்றார். மாலை செல்வோம் எனச் சொல்லியிருந்தேன்.
மறுநாள். ஞாயிறு காலை எட்டு மணிக்கு முத்துவிடமிருந்து போன். எப்ப கிளம்பலாமெனக் கேட்கக் கூப்பிடுகிறாரென நினைத்தேன். எடுத்ததுமே ‘மணி இறந்துட்டாராம்ங்க’ என்றார்.
‘இப்பதான் ஹோம்ல இருந்து பேசினாங்க. அடுத்து உங்களுக்குப் பேசுவாங்க. மக நம்பர்லாம் அவங்ககிட்ட இல்லையாம். அதனால நீங்களே ஹோம்க்குப் பேசுங்க. காலையில கண் செக்கப்க்கு நேரம் வாங்கி வச்சிருக்கேன். அதனால இப்ப அங்க வந்துட்டேன். என்னால உடனடியாக் கிளம்பக்கூட முடியல’ என்றார்.
அடுத்த சில நிமிடங்களில் ஹோமிலிருந்து எனக்கும் போன்.
‘நைட் நல்லாதான் சாப்பிட்டுப் படுத்தார். காலையில எழுப்பினா எந்திரிக்கலை. தூக்கத்துலயே உயிர் போயிருக்கு. டாக்டர் வந்து உறுதிப்படுத்திட்டாங்க. பொதுவா இங்க இறக்குறவங்களை நாங்களே அடக்கம் செய்திடுவோம். ஒருவேளை உறவுக்காரங்க வந்து கேட்டா கொடுத்திடுவோம். இப்ப அவர் தங்கிச்சி, மகளுக்கும்கூடத் தகவல் போயிருக்கு.. ஆனா உடலை எடுத்துட்டுப் போய் அடக்கம் பண்ண முடியாத சூழல்னு சொல்லிட்டாங்க. அதனால மூலகொத்தளம் சுடுகாட்டுக்கு உடலைக் கொண்டு போக ஆயத்தமாகிட்டாங்க. மகளும் தங்கச்சியும் அங்க வந்திடுறாங்களாம். நீங்க வர்றதுன்னாலும் அங்க வந்திடுங்க’ எனச் சொல்லி வைத்து விட்டனர்.
அரை மணி நேரத்தில் மூலகொத்தளம் மயானம் போனேன். ‘உறவுகள்’ ட்ரஸ்ட்டின் ஆம்புலன்சில் மணியின் பூத உடல்.. ஒரு மாலைக்கூட கழுத்தில் இல்லை
பக்கத்தில் அவருடைய தங்கை, சின்ன மகள், அவருடைய கணவர் என மொத்தம் மூன்றே பேர்.
மாலையைப் போட்டு மணி அண்ணனின் பூதவுடலை வணங்கிய அந்த நொடி… அவரது வார்தைகளே எனக்குள் ஒலித்தன. ‘இங்கன செத்தா தூக்கிப் போட நாலு பேர் வரமாட்டீகளா!’
எனையும் சேர்த்துச் சரியாக நான்கே பேர்தான் இருந்தோம். மூத்த மகள் வரவே இல்லை.
கொஞ்ச நேரத்தில் மணியின் உடல் காற்றோடு கலந்துவிட, கனத்த இதயத்துடன் அங்கிருந்து கிளம்பினேன்.
‘எடிட்டர் லெனின் சார்கிட்ட கூட்டிட்டுப் போங்களேன்’ என்ற மணியின் ஆசையை நிறைவேற்றவில்லை என்கிற குற்ற உணர்ச்சி மனதை என்னவோ செய்கிறது!