பாரா ஒலிம்பிக்ஸ் தொடரில் கலந்துகொண்ட இந்திய வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
பாரீஸில் 17-வது பாரா ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. 31 தங்க பதக்கங்கள் உட்பட 71 பதக்கங்களை வென்று சீனா பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். இதுவரையில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா, பதக்கப்பட்டியலில் 27-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் சார்பில் 17 வயது சிறுமி ஷீத்தல் தேவி கலந்துகொண்டார். பிறந்தது முதலே இரு கைகளை இழந்த அவர், தனது கால்கள் மூலமாக, வில்வித்தை போட்டியில் சிறந்து விளங்கி வருகிறார். நேற்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் கைகள் இல்லாமல் பங்கேற்ற ஒரே வீராங்கனை இவர்தான். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் வெறும் ஒரு புள்ளி வித்தியாசத்தில் சிலியின் மரியானா ஜுனிகாவிடம் தோல்வியடைந்து, காலிறுதியின் முந்தைய சுற்றோடு வெளியேறினார்.
இருப்பினும் முதன்முறையாக பாராலிம்பிக்கில் பங்கேற்ற ஷீத்தல் தேவி, தான் எய்த முதல் இரு அம்புகளிலேயே உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றார். முதல் இரு வாய்ப்புகளிலேயே முழு புள்ளிகளான 10-க்கு 10-ஐ பெற்று எதிரணியினரையே வியப்புக்குள்ளாக்கினார். தொடர்ந்து, நடைபெற்ற அடுத்தடுத்த சுற்றுகளிலும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். தனது கால்களை வைத்து அவ்வளவு துல்லியமாக அம்பு எய்து ஷீத்தல் தேவி சாதனைப் படைத்திருக்கிறார். பாரா ஒலிம்பிக்கில் 700 புள்ளிகளைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.
அவர் காலால் அம்பு எய்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல கால்பந்து ஒளிபரப்பாளரான பியர்ஸ் மோர்கன், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பலர் பாராட்டி இருக்கின்றனர். குறிப்பாக ஆனந்த் மகேந்திரா பாராட்டி கார் வழங்க இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
பதக்கம் வெல்லாமல் விட்டாலும், மக்கள் மனதை வென்றிருக்கிறார் ஷீத்தல் தேவி!