பாரீஸில் பாராலிம்பிக்ஸ் தொடர் வெகுச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்திய வீரர் வீராங்கனைகள் 19 பதக்கங்களை வென்றிருந்தனர். அந்த எண்ணிக்கையை முறியடிக்கும் முனைப்போடு இப்போது பாரீஸில் ஆடி வருகின்றனர்
இதில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் இப்போது கலக்கியிருக்கின்றனர். பாரா பேட்மின்டனில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் வெள்ளிப்பதக்கத்தையும், திருவள்ளூரைச் சேர்ந்த மனீஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருக்கின்றனர்.
துளசிமதி முருகேசனுக்கு இதுதான் முதல் ஒலிம்பிக்ஸ். கடந்த 2022-ம் ஆண்டு சீனாவில் நடந்த ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் தனிநபர் பிரிவில் தங்கம், இரட்டையர் பிரிவில் வெள்ளி, கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் என வென்று அசத்தியிருந்தார். மானஷி ஜோஷியுடன் இணைந்து இரட்டையர்களுக்கான போட்டியில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்தார். இப்போதைக்கு இவர்தான் இந்தியாவின் நம்பர் 1 பாரா பேட்மின்டன் வீராங்கனை.
மனிஷா ராமதாஷூம் திறமையான வீராங்கனைதான். உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். 2022-ம் ஆண்டு உலகளவில் நம்பர் 1 இடத்தை எட்டினார். அதே ஆண்டில் சர்வதேச பேட்மின்டன் சம்மேளனத்தின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்றார்.
இந்த இருவருமே பாரீஸ் பாராலிம்பிக்ஸில் SU 5 பிரிவில் ஆடியிருந்தனர். துளசிமதி முருகேசன் தொடக்கத்திலிருந்தே தன்னுடைய போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடியிருந்தார். போர்ச்சுக்கல், இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகளையெல்லாம் எளிதில் 10 புள்ளிகளுக்கு மேலான வித்தியாசத்தில் வீழ்த்தி செட்களை வென்றிருந்தார். அதேநேரத்தில் மனிஷா ராமதாஸ் கொஞ்சம் போராடித்தான் வென்றிருந்தார். பிரான்ஸ் வீராங்கனைக்கு எதிரான முதல் போட்டியிலேயே முதல் செட்டை இழந்து அடுத்த இரண்டு செட்களிலும் மீண்டு வந்து வென்றார். சீன வீராங்கனைக்கு எதிராக தோல்வியை தழுவியிருந்தார்.
துரதிஷ்டவசமாக இந்த இரண்டு தமிழக வீராங்கனைகளுமே அரையிறுதியில் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த அரையிறுதிப் போட்டி பரபரப்பின் உச்சக்கட்டத்தை எட்டியிருந்தது.
23-21, 21-17 என போட்டி ரொம்பவே நெருக்கமாகச் சென்றிருந்தது. அழுத்தமான சூழலைச் சிறப்பாக கையாண்டு துளசிமதி அந்தப் போட்டியை வென்றார்.
துளசிக்கு இறுதிப்போட்டி சீன வீராங்கனை யாங்குக்கு எதிராக. அதேமாதிரி, மனிஷாவுக்கு வெண்கலப் பதக்கப் போட்டி டென்மார்க் வீராங்கனை கேத்ரினுக்கு எதிராக. மனிஷா ராமதாஸ் இந்தப் போட்டியை இலகுவாக வென்றுவிட்டார். 21-12, 21-8 என முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார்.
இறுதிப்போட்டியில் துளசிமதிக்கு எதிராக மோதிய சீன வீராங்கனை யாங்க் டோக்கியோவில் தங்கம் வென்றவர். தன்னுடைய சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க அவர் முனைப்போடு இருப்பார் என்பதால், துளசிமதிக்கு சவால் காத்திருக்கிறது என்றே கணிக்கப்பட்டது. ஆனால், இதே யாங்க்கை வீழ்த்திதான் 2022-ல் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் துளசிமதி தங்கம் வென்றிருந்தார். ஆக, துளசிமதி மீதும் நம்பிக்கை இருந்தது.
இறுதிப்போட்டியின் முதல் செட்டில் துளசிமதி சவாலும் அளித்தார். 21-17 என குறுகிய புள்ளி இடைவெளியில்தான் யாங்க் அந்த முதல் செட்டை வென்றிருந்தார். ஆனால், முதல் செட்டை இழந்த அயர்ச்சியிலிருந்து துளசியால் மீள முடியவில்லை. இரண்டாவது செட்டின் தொடக்கத்திலேயே யாங்க் அட்டாக்கிங் மோடில் பாயின்ட்டுகளை அள்ளினார். ஒருகட்டத்தில் 11-5 என துளசிமதி கடும் பின்னடைவைச் சந்தித்தார். அதிலிருந்து அவரால் மீண்டே வர முடியவில்லை. 21-10 என துளசிமதி இரண்டாவது ஆட்டத்தையும் இழந்தார். வெள்ளிப்பதக்கம் மட்டுமே கிடைத்தது
தங்கம் கிடைக்காவிடிலும் சில நிமிட இடைவெளியில் தமிழக வீராங்கனைகள் அடுத்தடுத்து வென்ற இந்த இரண்டு பதக்கங்களுமே தங்கத்துக்கு இணையான சந்தோஷத்தைத்தான் கொடுத்திருக்கிறது.