ஹைதராபாத்: ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை – வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. இரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து காட்டாற்று வெள்ளம் போல மழைநீர் பாய்ந்தோடுகிறது. ஆந்திராவில் என்டிஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடந்த 3 நாட்களாக ஆந்திராவில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் கிட்டத்தட்ட 4.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல கிராமங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. பல இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதற்கிடையில் ஆந்திரா, தெலங்கானா முதல்வர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மழை, வெள்ள பாதிப்பு நிலவரங்களைக் கேட்டறிந்ததோடு மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்யும் என்று உறுதியளித்தார். இரண்டு மாநிலங்களிலும் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
ஆந்திர நிலவரம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று காலை விஜயவாடாவில் நேரில் சென்று ஆய்வு செய்தார். கடந்த மூன்று நாட்களாக ஆந்திராவில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் கிட்டத்தட்ட 4.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே 31,238 பேர் மீட்கப்பட்டு, 166 நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆந்திராவில் ஆடு, எருமை உள்ளிட்ட 39 கால்நடைகள் உயிரிழந்துள்ள நிலையில், பால்நாடு மாவட்டத்தில் 5,300 கோழிகள் (poultry birds) உயிரிழந்துள்ளன. 38 மீன்பிடி படகுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன எனக் கூறப்படுகிறது.
குண்டூர் மாவட்டத்தில் 33 கேவி மின்கம்பங்கள் சேதமடைந்து, 12 துணை மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், 1,067 கி.மீ நீளமுடைய சாலைகள் சேதமடைந்துள்ளன. அதே வேளையில் 129 இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 20 மரங்கள் வேரோடு சாய்ந்தன, இயற்கை சீற்றத்தால் போக்குவரத்து பரவலாக துண்டிக்கப்பட்டது.
20 மாவட்டங்களில் 1.50 லட்சம் ஹெக்டேர் விவசாயப் பயிர்களும், 13,920 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்ப இந்திய கடற்படை ஒப்புக்கொண்டது; அதில் ஒன்று ஏற்கெனவே விஜயவாடாவிற்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கி 6 பேர் பலியாகியுள்ளதால் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
சந்திரபாபு நாயுடு தகவல்: காலையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சந்திரபாபு, “கனமழை வெள்ளத்தால் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. விஜயவாடா வெள்ளக் காடாகியுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். மாநில அரசு மழை பாதிப்பிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க அனைத்து வகையிலும் உதவிக்கரம் நீட்டி வருகிறது” என்றார். மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானா: தெலங்கானாவில் பெய்த கனமழை மற்றும் மழை தொடர்பான பல்வேறு சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க, மத்திய அரசை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். வெள்ள சேதம் குறித்த விரிவான அறிக்கையை மத்திய அரசிடம், மாநில அரசு சமர்ப்பிக்கும் என தெலங்கானா அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ள முதல்வர் ரேவந்த் ரெட்டி, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிடுமாறு பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார். முதற்கட்ட மதிப்பீட்டின்படி ரூ. 5,000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி, மாநில அரசு, மத்திய அரசிடமிருந்து ரூ.2,000 கோடி கோரியுள்ளது.
மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி ஸ்ரீதர் பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், “உயிர் சேதம் மற்றும் பிற சேதங்கள் குறித்த முழு விவரம் சேதம் குறித்த அறிக்கைகள் வந்த பிறகே தெரியவரும். வெள்ள சேதம் குறித்த விரிவான அறிக்கையை மத்திய அரசிடம், மாநில அரசு சமர்ப்பிக்கும்” என்றார்.
தெலங்கானாவில் தேர்வுகள் ரத்து: தெலங்கானாவில் இன்றும் மிதமான மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் இன்று (திங்கள்கிழமை) மாநிலம் முழுவதும் அரசு, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. பல்வேறு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஹைதராபாத்தின் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த பிடெக் 3ஆம் ஆண்டு தேர்வு, பி ஃபார்ம் 3ஆம் ஆண்டு தேர்வு, எம்பிஏ முதலாம் ஆண்டு முதல் பருவத் தேர்வுகள் வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஒஸ்மானியா பல்கலைக்கழக தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில் இன்று நடைபெறவிருக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. மற்ற தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும். இன்று ஒத்திவைக்கப்படும் தேர்வுக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
ராகுல் காந்தி வலியுறுத்தல்: ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி திங்கள்கிழமை வருத்தம் தெரிவித்தார். மேலும் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “எனது எண்ணங்கள் அனைத்தும் வெள்ளம் மற்றும் இடைவிடாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திர மற்றும் தெலங்கானா மக்களை குறித்தே உள்ளது. அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரப் பணிகளில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இணைந்து பணியாற்றுமாறு வலியுறுத்துகிறேன். வெள்ள நெருக்கடியை சமாளிப்பதற்கும், மீண்டு வருவதற்கும் தெலங்கானா அரசு அயராது உழைத்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக மறுவாழ்வு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மத்திய அரசு, ஆந்திர அரசை கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.