கோவை: “தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது முற்றிலும் தவறானது,” என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் பள்ளிக்கல்வி பாடத்திட்டம் மிகவும் மோசமானது. மற்ற மாநிலங்களின் பாடத்திட்டத்தை விட மிகவும் தாழ்வானது. தமிழக மாணவர்கள் இதர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் போட்டியிட முடியாது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது முற்றிலும் தவறானது. தமிழக பாடத்திட்டம் 2017-18-ம் ஆண்டில், அப்போதைய பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் முழுமையாக திருத்தப்பட்டு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு இணையாக மேம்படுத்தப்பட்டது.
சிறந்த பாடப் புத்தகங்களும் உருவாக்கப்பட்டன. பாடத்திட்டம் உருவாக்க அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவில் நானும் ஒரு உறுப்பினராக இருந்தேன். இன்றைய சூழலில் பிரச்சினை என்பது பாடத்திட்டத்தில் அல்ல. அரசு பள்ளிகளில் கற்பித்தல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளின் தரத்தில் தான் உள்ளது. அர்ப்பணிப்பு இல்லாத, பொறுப்பற்ற தன்மையுடைய ஆசிரியர்களால் அரசு பள்ளிகளில் கல்வித்தரம் மோசமான தரத்துக்கு சென்றுள்ளது. எனவே, பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்த அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.