புதுடெல்லி: செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் தடுப்பு சட்ட வழக்கு விசாரணைக்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு விசாரணை நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 மோசடி வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்குகளின் அடிப்படையில், செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை தனியாக வழக்கு பதிவு செய்து அவரை கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக சென்னை புழல் மத்திய சிறையில் அவர் அடைக்கப் பட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் மனு: இதற்கிடையே, ‘எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் மீதான விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்’ என்று கோரி ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்திலும் வழக்கு பதிவு செய்து இந்த வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
ஆனால், தற்போதுவரை அந்த விசாரணை முடியவில்லை. எனவே, இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஒப்புதல் அளிக்க கோரும் கோப்பு, ஆளுநர் முன்பு நிலுவையில் உள்ளது’ என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இது தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘‘முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் தடுப்பு சட்ட வழக்கு விசாரணைக்கு ஆளுநர் தற்போதுதான் அனுமதி அளித்துள்ளார். எனவே, அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் மற்றும் அமலாக்கத் துறை தரப்பில், ‘‘செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை விரைவாக நடத்துவதற்கு ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு நீதிபதியை நியமிக்க வேண்டும். மேலும், நடுநிலையுடன் செயல்படும் அரசு வழக்கறிஞர் ஒருவரையும் நியமிக்க வேண்டும். விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்’’ என்று கோரப்பட்டது.
7 மாதங்கள் கழித்து..இதையடுத்து நீதிபதிகள் கூறியபோது, ‘‘தமிழக ஆளுநர் 7 மாதங்கள் கழித்து, அதுவும் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த பிறகுதான் செந்தில் பாலாஜிக்கு எதிரான விசாரணைக்கு அனுமதி வழங்கியுள்ளார். இதை எப்படி எடுத்துக் கொள்வது? இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?’’ என்று கேள்வி எழுப்பினர். பின்னர், ‘‘செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்த அறிக்கையை விசாரணை நீதிமன்றம் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அரசு சிறப்பு வழக்கறிஞரை மாற்றும் கோரிக்கை குறித்து பிறகு பரிசீலிக்கலாம்’’ என்று கூறிய நீதிபதிகள், விசாரணையை 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.