“கலைஞர் இருந்தவரை எங்களுக்குப் பாதுகாப்பு இருந்தது'' – ஆதங்கப்படும் ஆர்.கே.செல்வமணி

வடபழனியில் உள்ள ஸ்டன்ட் யூனியன் வளாகத்தில் தென்னிந்தியத் திரைப்பட சினி மற்றும் டிவி ஸ்டன்ட் இயக்குநர்கள், ஸ்டன்ட் நடிகர்கள் சங்கம் சார்பில், ஸ்டன்ட் கலைஞர்களின் வளர்ச்சிக்கும் தொழிலாளர்களின் மாநில காப்பீட்டு உரிமையைப் பெற்றுத் தரவும் நாடாளுமன்றத்தில் பேசிய நாடாளுமன்ற மாநிலங்களவை தி.மு.க குழுத் தலைவர் திருச்சி சிவாவிற்கு நன்றி தெரிவித்து, கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நன்றி விழா

அதில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசியபோது, “திரைப்படத்துறை நன்றி உள்ள துறை, எத்தனை காலம் ஆனாலும் நாங்கள் நன்றியை மனதில் வைத்துக் கொள்வோம். இங்கு யாரும் எங்களைப் பற்றி பேசாமல் இருக்கும்போது, நீங்கள் எங்கள் கண்ணீரைப் பற்றி பேசியுள்ளீர்கள். முதன்முறையாக எங்களுக்காக நீங்கள் குரல் கொடுத்தபோது, அது எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது” என்று திருச்சி சிவாவிற்கு நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “சினிமாவில் அஜித், விஜய் போன்ற ஒரு சதவிகித பேர்தான் நன்றாக உள்ளனர். மீதம் 99 சதவிகிதம் பேரின் வாழ்க்கை அன்றாடங்காய்ச்சியாகத்தான் இருக்கிறது. மக்களை சிரிக்க வைப்பதற்காக கிட்டத்தட்ட 30, 40 வருடங்கள் நாங்கள் உழைத்துக்கொண்டேதான் இருக்கிறோம். மரணம் பக்கத்தில் இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. 4 அடி உயரத்தில் இருந்து குதி என்றாலும் 5 அடி உயரத்தில் இருந்துகூட குதிக்க எங்களது ஸ்டன்ட் மாஸ்டர்கள் தயாராக இருப்பார்கள். சாதாரண லைட்மேனில் இருந்து அனைவரும் கடுமையாக உழைப்பார்கள். சென்னையில் எங்களால் வாடகை கொடுத்து வாழ முடியாத சூழ்நிலையால், சென்னை புறநகர்ப் பகுதியில் குறைந்த வாடகை வீட்டில் வசித்து வருகிறோம்.

அஜித், விஜய்

மற்றவர்கள் 8 மணி நேரம் வேலை பார்க்கும் நிலையில், நாங்கள் 18 மணி நேரம் வேலை செய்கிறோம். ஆனால், எங்களுக்கு அரசு தரப்பில் எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை. கலைஞர் எங்களுக்கு ஒரு மகத்தான திட்டத்தை கொடுத்தார், கலைஞர் ஆட்சிக்காலத்தில் எங்களுக்கு காப்பீடு திட்டம் கொடுத்தார். தமிழகத்தில் அடுத்ததாக வந்த ஆட்சி கலைஞர் என்று பெயர் கொண்டதால், அந்த திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. கலைஞர் இருந்தவரை எங்களுக்கு பாதுகாப்பு இருந்தது. சினிமா துறையில் உள்ள 25 ஆயிரம்‌ பேருக்கு மருத்துவ உதவிகள், வீடுகள் கட்டித் தர வேண்டும் என முதலமைச்சரைச் சந்தித்து கோரிக்கை வைத்திருக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.