கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். இந்நிலையில், சித்தராமையா மீது பழங்குடியினர் நல வாரிய ஊழல், மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கியதில் விதிமுறை மீறல் ஆகிய பிரச்சினைகளால் அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதால், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என பாஜகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
ஒருவேளை சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தால், யாரை முதல்வராக நியமிப்பது என காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தியுள்ளது. இதேபோல துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர்கள் பரமேஷ்வரா, சதீஷ் ஜார்கிஹோளி ஆகியோரும் முதல்வர் பதவியை கைப்பற்றுவது குறித்து தமது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இதற்கிடையில் கடந்த 2018-ம் ஆண்டு குமாரசாமி தலைமையில் மஜதவும், காங்கிரஸும் இணைந்து கூட்டணி அமைத்தபோது பாஜக, ஆபரேஷன் தாமரை மூலம் 14 எம்எல்ஏக்களை தங்கள்பக்கம் இழுத்தது. இதனால் குமாரசாமியின் கூட்டணி அரசு கவிழ்ந்து, பாஜக ஆட்சிக்கு வந்தது. அதே பாணியில் பாஜக மீண்டும் ஆபரேஷன் தாமரை கையிலெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ரூ.100 கோடி பேர புகார்: இந்நிலையில், மண்டியா காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகா கூறுகையில், ‘‘பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, ஷோபா, மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் ஆகியோர் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசிவருகின்றனர். அவர்களிடம் உங்களுக்கு ரூ.100 கோடியும், அமைச்சர் பதவியும் தருகிறோம். பாஜகவுக்கு வந்து விடுங்கள் என பேரம் பேசுகின்றனர். எனக்கும் இதேபோல போன் செய்து ஆசை காட்டினர். நான் அமலாக்கத் துறையில் புகார் செய்வேன் என எச்சரித்தேன்” என்று குற்றம்சாட்டினார்.
பிரஹலாத் ஜோஷி எச்சரிக்கை: மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிகூறுகையில், ‘‘ஆபரேஷன் தாமரையில் ஈடுபட வேண்டிய அவசியம் பாஜகவுக்குஇல்லை. காங்கிரஸ் ஆட்சி ஊழலின்காரணமாக தானாகவே கவிழ்ந்துவிடும். சித்தராமையாவுக்கும் டி.கே.சிவகுமாருக்கும் இடையே மோதல் பகிரங்கமாக தெரிகிறது. இந்நிலையில் என் பெயரை இழுக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகா மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்தார்.