முல்லை பெரியாறு அணையில் ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தடை பெற வேண்டும்: ராமதாஸ், டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வுநடத்ததுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தடை பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரள அரசின் கோரிக்கையை ஏற்று, முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்புகுறித்து ஆய்வு நடத்த, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழு ஆணையிட்டுள்ளது.

அணையை வலுப்படுத்தி, நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தீர்ப்பு இன்னும் செயல்படுத்தப்படாத நிலையில், பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு நடத்துவது, தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.

அணையின் பாதுகாப்பு குறித்த ஆய்வை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று கண்காணிப்புக் குழு ஆணையிட்டிருந்தாலும், அது முடிவடைய 2 ஆண்டுகளாகும். அதுவரை பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள முடியாது. அறிவியல்பூர்வ ஆய்வு முடிந்த பிறகு அணையை வலுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டால்கூட, அதன் பிறகு 152 அடி நீர்மட்டத்தை அணை தாங்குமா என்பதை உறுதி செய்ய, மீண்டும் ஒருமுறை பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்பிறகுதான் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியும். இதற்கு குறைந்தது 10 ஆண்டுகளாகும்.

பேபி அணையை வலுப்படுத்த தடையாக இருக்கும் 15 மரங்களை வெட்ட அனுமதிக்கப்பட்டால், ஓராண்டுக்குள் அணையை வலுப்படுத்தும் பணிகளை தமிழக அரசுமுடித்து விடும். அதன்பிறகு பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டால், அணை வலிமையாக உள்ளதா, அதன் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாமா என்ற வினாக்களுக்கு விடை கிடைத்து விடும். அது அணை குறித்த சிக்கல்களுக்குத் தீர்வு அளிக்கும்.

எனவே, தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி,கண்காணிப்புக் குழுவின் ஆணைக்கு தடை பெற வேண்டும்.மரங்களை வெட்டி பேபி அணையைவலுப்படுத்திய பிறகு, முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்ளலாம் என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றத்திடம் இருந்து பெற வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

டிடிவி.தினகரன் கோரிக்கை… அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “முல்லைபெரியாறு அணை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கான பரிந்துரையை, மத்திய நீர்வள ஆணையம் திரும்பப் பெற வேண்டும்.

முல்லை பெரியாறில் புதியஅணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் திட்டத்துக்கு மத்தியஅரசு துணைபோகக் கூடாது. அணையின் பாதுகாப்பு குறித்தஆய்வு என்ற பெயரில், தென் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்துடன், மாநில அரசின் உரிமையும் பறிபோகும் சூழல் ஏற்படும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு மவுனமாக இருப்பது, விவசாயிகளுக்கு இழைக்கும் துரோகமாகும்.

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஆய்வு செய்வதற்கு வழங்கப்பட்டிருக்கும் பரிந்துரையை உடனடியாக திரும்பப் பெறுவதுடன், இந்த விவகாரத்தில் கேரள அரசுக்கு துணை போகக்கூடாது என்று நீர்வள ஆணையத்தையும், மத்திய அரசையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.