தமிழ்த் திரைத் துறையிலும் `ஹேமா கமிட்டி’ போல குழு அமைக்கப்படுமா? – வலுக்கும் கோரிக்கை

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை

மலையாள திரைப்படத்துறையில் பெண் திரைக்கலைஞர்கள், நடிகைகள் சந்தி(த்த)க்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளியாகியிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியின் 233 பக்கங்கள் கொண்ட அறிக்கை மல்லுவுட்டில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. இதையடுத்து, கேரள திரையுலகிலுள்ள பல்வேறு நடிகர்கள், இயக்குநர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தீவிரத்தால் கேரள திரைப்படத்துறையின் அம்மா சங்க தலைவர் மோகன்லால் தொடங்கி 15-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர்.

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நடிகர்கள்

இந்தநிலையில், `மலையாள திரைத்துறையில் பெண்கள் மீது அரங்கேற்றப்பட்டிருக்கும் பாலியல் சுரண்டலைப்போல தமிழ்த் திரைத்துறையிலும் இதுபோன்ற சிக்கல்களை பெண் திரைக்கலைஞர்கள் சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆக மல்லுவுட்டைப்போல டோலிவுட், கோலிவுட்டிலும் விசாரணைக்குழு அமைத்து பகிரங்கப்படுத்தவேண்டும்’ என பல்வேறு நடிகைகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

குறிப்பாக இந்த விவகாரம் குறித்து பேசிய நடிகை ராதிகா, “தமிழ் சினிமாவுல தவறுகள் நடக்குறது இப்போ குறைஞ்சு போச்சு. படிச்சவங்க பலர் இங்க வந்துட்டாங்க. ஆனா, எங்கேயோ ஒரு இடத்துல தவறுகள் நடக்குறதுக்கு வாய்ப்புகள் இருக்கு. நான் நாசர் கிட்ட வலுவான கமிட்டி வைங்கனு சொல்லியிருக்கேன். நான் எல்லா நடிகர்கள், இயக்குநர்கள்கூட வேலை பார்த்திருக்கேன். முன்பு இருந்த மாதிரி ஆபத்து இப்போ இல்ல. இப்போ காதலிக்கிறேன்னு சொல்லி ஏமாத்துறாங்களானு தெரியல. ஏனெனில் இப்போ இருக்கிறது வேற மாடல். நடிகைகளை தாண்டி மற்ற கதாபாத்திர நடிகைகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது தயாரிப்பு நிறுவனம்தான். இதை பத்தி நான் தயாரிப்பாளர் கவுன்சில்லையும் சொல்லியிருக்கேன். பாதுகாப்பான கேரவன், கழிப்பிடம் போன்றவை தயாரிப்பு நிறுவனம்தான் பார்த்துக் கொடுக்கணும். புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பாங்க என பெண்கள் நம்புற அளவுக்கு ஒரு கமிட்டி அமைக்கணும்!” என கோரிக்கை விடுத்தார்.

ரஜினி – ராதிகா

மழுப்பலான பதில்கள்…

இதுகுறித்து பத்திரிகையாளர்கள் தமிழ் நடிகர்களிடம் கேள்விகேட்க பலரும் மழுப்பலான பதிலளித்துச் செல்கின்றனர். குறிப்பாக, தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் ரஜினிகாந்த்திடம் `மலையாள திரைத்துரையில் அமைத்ததைப்போல தமிழ்த் திரையுலகிலும் ஹேமா கமிட்டி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்களே…?’ என பத்திரிகையாளர்கள் கேள்விகேட்க, “அதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாதுங்க…சாரி” என ஒற்றைவரியில் பதிலளித்துச் சென்றார். இதை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்துவருகின்றனர்.

ஹேமா கமிட்டி

`பாதுகாப்பான சூழல்தான் நிலவுகிறது’ – விஷால்

முன்னதாக இந்த சர்ச்சைகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளரும் நடிகருமான விஷால், “தமிழ்த் திரைப்படத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல்தான் நிலவுகிறது. படப்பிடிப்பு தளங்களில் அந்தந்த புரொடக்‌ஷன் நிறுவனங்கள் பாதுகாப்பு கொடுக்கின்றனர். நடிகைகளும் தங்கள் பாதுகாப்புக்காக உடன் பவுன்சர்களை வைத்திருக்கிறார்கள். திரைப்படத்துறையில் வாய்ப்பு கேட்டு வருபவர்களில் 20% பேருக்குதான் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மற்ற 80% பேருக்கு வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றமாகப் போய் விடுகிறது. முதலில், அவர்கள் எந்த கம்பெனிக்கு செல்கிறார்கள், அந்தக் கம்பெனியினர் சொல்வது உண்மையா? சினிமா எடுக்கிறவர்கள் தானா? என்பதுகுறித்தெல்லாம் சுதாரித்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

நடிகர் சங்கம் ஆண்களுக்கு மட்டும் அல்ல…

மேலும், குழு குறித்த கேள்விக்கு,“நடிகர் சங்கத்தின் சார்பில் ஹேமா கமிட்டி போன்று, 10 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இதை செய்யவேண்டியது எங்களின் கடமை. நடிகர் சங்கம் என்பது வெறும் ஆண்களுக்கு மட்டும் அல்ல, பெண்களுக்கும்தான். பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு யாராவது இருக்கிறார்களா? என்று நினைக்கும்போது அவர்களுக்காக நிச்சயம் நடிகர் சங்கம் இருக்கும் என்ற நம்பிக்கையை கொடுப்போம். எவனோ ஒருத்தன் பைத்தியக்காரத்தனமாக, கண்டிப்பாக ஒரு பெண்ணை பயன்படுத்திக்கொள்வதற்காக முயற்சி செய்வான். இதைத் தவிர்க்கவேண்டுமென்றால் அந்தப் பெண்ணுக்கு மன தைரியம் வேண்டும். அப்படி கேட்பவர்களை செருப்பால் அடிக்க வேண்டும்! என்றுதான் நான் சொல்வேன்!” என ஆவேசமாகப் பதிலளித்தார்.

விஷாலின் இந்த பதிலை நடிகை ஶ்ரீ ரெட்டி தனது எக்ஸ் தளத்தில் காட்டமாக விமர்சிக்க, அதுகுறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு விஷால் கொந்தளித்துப் பேச இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டிருக்கிறது.

நடிகர் விஷால்

இந்தநிலையில், வி.சி.க பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ரவிக்குமார், “கேரள திரைப்படத்துறையில் பெண் கலைஞர்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களை ஆய்வு செய்து அவற்றுக்கான தீர்வுகளைப் பரிந்துரைப்பதற்காக கேரள மாநில அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானது. அது கேரளாவில் மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையில் இரண்டு இடங்களில் தமிழ்நாடு குறிப்பிடப்பட்டுள்ளது. “ஜூனியர் ஆர்டிஸ்டுகள் சிலரது பெயர்களும் மொபைல் எண்களும் கிடைத்தன. அவர்களைத் தொடர்புகொண்டபோது தாங்கள் தமிழ்நாட்டில் இருப்பதாகவும், வயதாகிவிட்டது, எனவே கேரளாவுக்கு வந்து கமிட்டியிடம் நேரில் வாக்குமூலம் தர முடியவில்லை எனவும் தெரிவித்ததாக” அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எம்.பி- ரவிக்குமார் (விழுப்புரம்)

கேரளாவைவிட மிகப்பெரிய அளவிலான ஃபில்ம் இண்டஸ்ட்ரி தமிழ் ஃபில்ம் இண்டஸ்ட்ரி ஆகும். இங்கேயும் பெண் கலைஞர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக அவ்வப்போது செய்திகள் கசிவதுண்டு. நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை இன்று தமிழ் ஊடகங்களில் பேசுபொருளாகியிருக்க வேண்டும். ஏனோ இங்கு அது விவாதிக்கப்படவே இல்லை. கேரளாவைவிடவும் சினிமா – ஊடகங்கள்- அரசியல் என்ற வலைப்பின்னல் தமிழ்நாட்டில் வலுவாக உள்ளது. நமக்கென்ன என்று கடந்து செல்வதற்கும் அதற்கும் தொடர்பிருக்கலாம். தி நியூஸ் மினிட் தளத்தில் தன்யா ராஜேந்திரன் என்பவர் அந்த அறிக்கை பற்றி சிறப்பான விவாதங்களை நடத்தியிருக்கிறார். அதுபோல தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியோடு தொடர்புள்ளவர்களிடமும் அவர் விவாதித்தால் நீதிபதி ஹேமா கமிட்டிபோல இங்கும் ஒரு கமிட்டி அமைக்கும் நிலை வரலாம்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் திரையுலகிலும் அது போன்ற குழு அமைக்கப்படுமா, என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Loading…

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.