அஜித்தின் ‘விடா முயற்சி’ படப்பிடிப்பு நிறைவு பெற்றதால், அதன் ரிலீஸ் தேதி அறிவிப்பும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் படம் வருகிற தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. அல்லது டிசம்பர் 20-ம் தேதி திரைக்கு வரும் என்ற பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் பரவுகிறது.
அஜித்தின் திரைப் பயணத்தில் இந்த ஆண்டு, கொஞ்சம் ஸ்பெஷல் ஆண்டு. காரணம், கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடித்தது போல, இந்தாண்டில் அவர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ‘விடா முயற்சி’, ஆதிக் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ என இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். இதில் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு தொடங்கும் போதே, பொங்கல் வெளியீடு என அறிவித்தனர்.
மகிழின் இயக்கத்தில் ‘விடா முயற்சி’யில் அஜித், த்ரிஷா, ரெஜினா கஸன்ட்ரா, அர்ஜூன், நிகில் நாயர், ஆரவ், சஞ்சய் சாரா, தசரதி என பலரும் நடித்துள்ளனர். அஜித்தின் ‘ஆரம்பம்’ பட ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட்ஸ், அனிருத் இசை என அசத்தலான டீமும் படத்தில் உள்ளனர். கடந்த மாத துவக்கத்தில் ‘விடா முயற்சி’ படப்பிடிப்பு நிறைவு பெற்றதால், இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா என பலரும் வேறு படங்களுக்கு சென்று விட்டதால், டப்பிங் பேசுவதற்கு அவர்களிடம் தேதிகள் கேட்கப்பட்டிருக்கிறது. ‘குட் பேட் அக்லி.’ படப்பிடிப்பிற்கு இடையே அஜித் இதன் டப்பிங்கை பேசிவிடுவார் என்கிறார்கள்.
இந்நிலையில் வெளியீடு குறித்தும் தகவல்கள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. அஜித்தின் ரசிகர்கள் தீபாவளி வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ஆனால், கிராபிக்ஸ் மற்றும் இதர வேலைகள் இப்போது தீவிரமாக நடந்துவ் வருவதால், படம் தீபாவளி வெளியீடு சாத்தியமில்லை என்கின்றனர். ஏற்கெனவே சிவகார்த்திகேயனின் ‘அமரன்’, ராஜேஷின் ‘பிரதர்’, நெல்சன் தயாரித்திருக்கும் ‘பிளடி பெக்கர்’ ஆகிய படங்கள் திரைக்கு வருகிறது. துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ பான் இண்டியா படம் என்பதால், அதுவும் தீபாவளிக்கு வெளிவருகிறது என்பதால், இதனுடன் சேர்ந்து வந்தால் குறைவான தியேட்டர்களே கிடைக்கும். இதனால் தீபாவளிக்கு படம் வெளி வராது என்கின்றனர்.
அதே சமயம் வரும் டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வரும் என்ற பேச்சும் நிலவுகிறது. ஆனால், அஜித் தரப்பில் இந்த தேதி உண்மையில்லை என்கின்றனர். தீபாவளிக்கு பிறகு தான், படத்தின் ரிலீஸ் குறித்து தெரிய வரும். ரிலீஸ் தேதி முடிவானதும், உடனடியாக படத்தின் பாடல் ஒன்றின் லிரிக் சிங்கிள் வீடியோ வெளியிட முடிவு செய்துள்ளனர். ஒருவேளை அக்டோபர் கடைசியில் ரிலீஸ் தேதி முடிவானால், தீபாவளி வாழ்த்து விளம்பரத்தில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்றும், அதன் பின் நவம்பரில் முதல் சிங்கிள் வெளிவரும் என்றும் சொல்கிறார்கள்.!
விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41