வங்கதேச டெஸ்ட் தொடரில் காபா டெஸ்ட் நாயகனுக்கு இடம் கொடுக்க கம்பீர், ரோகித் முடிவு

இந்திய கிரிக்கெட் அணி செப்டம்பர் 19 முதல் பங்களாதேஷுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணி, அதன்பிறகு விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். இந்த தொடருக்கான இந்திய அணி அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது. இந்திய அணியில் யார் யார் இடம்பெற உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் நிலையில், ரிஷப் பந்த் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கவுதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்று நடக்க இருக்கும் முதல் டெஸ்ட் தொடர் என்பதால், யாரை சேர்க்கலாம்? என்பது குறித்து அவர் தீவிர ஆலோசனையில் இருக்கிறார்.

விராட் கோலிக்கு வாய்ப்பு

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி மீண்டும் சேர்க்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகினார். அதாவது, இரண்டாவது குழந்தை பிறப்பு காரணமாக விராட் கோலி இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. ஆனால், வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறார். 

ரிஷப் பந்த் சேர்க்கப்படுவாரா?

ரிஷப் பந்த் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்புவது உறுதியாகியுள்ளது. அவர் கடைசியாக 2022 டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன்பிறகு அவர் ஒரு பயங்கரமான கார் விபத்தில் சிக்கி சிகிச்சையில் இருந்தார்.  2024 ஐபிஎல் தொடர் மூலம் மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு  வந்தார் ரிஷப்.  பின்னர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம்பிடித்தார். இந்நிலையில் தற்போது அவர் இந்திய அணிக்கு திரும்புவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பந்த் இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் மற்றும் 11 அரை சதங்கள் உட்பட 2271 ரன்கள் எடுத்துள்ளார். 2021 ஆம் ஆண்டு காபாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக ஒரு இன்னிங்ஸ் ஆடி அந்தப் போட்டியில் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 

சர்பராஸுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

சர்பராஸ் கான், துருவ் ஜூரல் ஆகியோர் அணியில் இடம் பெறுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த இரண்டு வீரர்களும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார்கள். ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகிய மூவரும் அணியில் இடம்பிடிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. ரிஷப் பந்த் தவிர, துருவ் ஜூரல் இரண்டாவது விக்கெட் கீப்பராக அணியில் சேர்க்கப்படலாம். அதே சமயம் குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் அணியில் நீடிப்பதும், ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா? என்பதும் ரகசியமாக இருக்கிறது. ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார் ஆகியோரில் யாரேனும் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.