விஜய்யின் 25வது படமான ‘கண்ணுக்குள் நிலவு’, அஜித்தின் ‘ஆழ்வார்’, சூர்யா இரண்டு வேடங்களில் நடித்த ‘வேல்’ உள்படப் பல படங்களைத் தயாரித்தவர் மோகன் நடராஜன். வயது மூப்பின் காரணமாகச் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார். அவருக்கு வயது 71.
மறைந்த மோகன் நடராஜன், ராஜகாளியம்மன் மூவிஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் ‘வேலை கிடைச்சிருச்சு’, ‘கிழக்குக்கரை’, ‘கோட்டைவாசல்’, சுரேஷ் நடித்த ‘பூக்களைப் பறிக்காதீர்கள்’, விஜயகாந்த் நடித்த ‘பூ மழை பொழியுது’, பி.வாசுவின், ‘என் தங்கச்சி படிச்சவ’, ‘பிள்ளைக்காக’, ‘எங்க அண்ணன் வரட்டும்’, ‘சாமுண்டி’, ‘மறவன்’, ‘பதவிப் பிரமாணம்’, ‘கண்ணுக்குள் நிலவு’, ‘ஆழ்வார்’, ‘வேல்’ எனப் பல படங்களைத் தயாரித்திருக்கிறார். கமலின் ‘மகாநதி’, அஜித்தின் ‘சிட்டிசன்’ உள்பட சில படங்களில் நடிகராகவும் பேசப்பட்டவர் இவர்.
இந்நிலையில், மோகன் நடராஜனின் மறைவு குறித்து, ‘ஆழ்வார்’ படத்தின் இயக்குநர் எஸ். ஷெல்லா, கனத்த இதயத்துடன் பகிர்ந்த விஷயங்கள் இங்கே..
”மோகன் சார் மறைவு செய்தியை காலையில்தான் கேள்விப்பட்டேன். அதிர்ச்சியா இருந்தது. அவரை ஒரு தயாரிப்பாளர்னு சொல்றதை விட, என்னோட அப்பானு சொல்லலாம். ஏன்னா ஸ்பாட்டுக்கு வந்தார்னா, ஒரு தயாரிப்பாளரா இருக்க மாட்டார். என்னை அவரோட மகன் மாதிரி பார்த்துக்கிட்டார். அதை என்னால மறக்கவே முடியாது. இப்படி ஒரு தயாரிப்பாளர் அமையறது வரம்.
‘ஆழ்வார்’ கதையை அவரிடம் சொன்னதும், ரொம்ப பிடிச்சிருக்குதுனு சொல்லி சந்தோஷப்பட்டார். அப்படியே அஜித் சார்கிட்ட கதையைச் சொல்லச் சொன்னார். அஜித் சாருக்கும் ‘ஆழ்வார்’ கதை ரொம்பவும் பிடிச்சிருந்தது. இந்தப் படம் சரியாகப் போகாததில், மோகன் சாருக்கு வருத்தங்கள் அதிகம் இருந்தது. சுத்தி இருக்கறவங்களை என்கரேஜ் பண்ணிட்டே இருப்பார்.
அற்புதமான மனிதர். என்னை இயக்குநர் ஆக்கியவர் அவர். மோகன் சார் சினிமாவை ரொம்ப நேசிப்பார். கதை விவாதங்களில் பங்கேற்பதை விரும்புவார். அவரோட படங்களின் ஸ்டோரி டிஸ்கஷன்களில் உதவி இயக்குநர்களோடு அவரும் இணைந்து பல இன்புட்ஸ்களை கொடுப்பார். அத்தனையும் கதையை மெரூக்கேத்தும் விஷயங்களாக இருக்கும். எப்பவும் சினிமாவை பத்தி சிந்திக்கறவர். சினிமாவில் உள்ள அத்தனை விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பார். அப்டேட் ஆகிட்டே இருப்பார். விஜய் சார் மீதும், அஜித் சார் மீதும் பெரும் மரியாதை வச்சிருந்தார். அவரோட மறைவு திரைத்துறைக்கு மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் எனக்கு இழப்பு அதிகம்.” என்று குரல் உடைந்து பேசினார் இயக்குநர் ஷெல்லா.
மோகன் நடராஜனின் மறைவுக்கு நடிகர் சூர்யா, இயக்குநர் பி.வாசு உள்படப் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.