சமீபத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுவரை சென்ற இந்திய மல்யுத்த வீராங்கணை வினேஷ் போகத் கடைசி நேரத்தில் உடல் எடையை காரணம் காட்டி போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் பதக்கம் பெறுவார் என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த நிலையில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது இந்தியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து நாடு திரும்பிய போது ஹரியானா காங்கிரஸ் எம்.பி.தீபேந்தர் வரவேற்றார். அதிலிருந்து அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவார் என்று செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தது. ஹரியானாவில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் வினேஷ் போட்டியிட இருப்பதாக செய்தி வெளியாகிக்கொண்டிருந்தது.
ஹரியானா தேர்தலில் வினேத், பஜ்ரங் போட்டி
தற்போது அது உறுதியாகி இருக்கிறது. மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத்தும், பஜ்ரங் புனியாவும் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை இன்று நேரில் சந்தித்து தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டனர். வினேஷ் போகத் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் ஜிலானா தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் இரு மல்யுத்த வீரர்களும் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. சமீபத்தில் ஹரியானா விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது வினேஷ் நேரில் சென்று அவர்களுடன் சேர்ந்து போராடினார். அவர்கள் மத்தியில் பேசும் போது உங்களது போராட்டம் 200 நாள்களை கடந்திருக்கிறது. நீங்கள் விரும்பும் நீதியை கொடுக்க கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் என்று கூறினார்.
வினேஷ், பஜ்ரங் புனியா உள்பட மல்யுத்த வீரர்கள் அகில இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க எம்.பியுமான பிரிஜ் பூசனுக்கு எதிராக கடந்த ஆண்டு டெல்லியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். பிரிஜ் பூசன் மல்யுத்த வீராங்கணைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாகவும், அவரை பதவியில் இருந்து நீக்கி அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி பல மாதங்களாக போராட்டம் நடத்தினர். ஆனால் மத்திய அரசு பிரிஜ் பூசன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பிரிஜ் பூசன் தனது பதவிக்காலம் முடிந்த பிறகுதான் அகில இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பிறகுதான் பிரிஜ் பூசன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் மல்யுத்த வீராங்கணைகள் கேட்ட படி அவர் கைது செய்யப்படவில்லை. மக்களவை தேர்தலில் பிரிஜ் பூசனுக்கு வாய்ப்பு கொடுக்காத பா.ஜ.க அவரது மகன் கரன் பூசனுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுத்தது. மல்யுத்த வீரர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு கிடைத்த பலமாக கருதப்படுகிறது.
ஹரியானா சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் பரிசீலித்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சி 10 தொகுதிகள் கேட்கிறது. ஆனால் காங்கிரஸ் 7 தொகுதிகள் கொடுக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்து. ஆனால் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே மொத்தமுள்ள 90 தொகுதியில் 66 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. எஞ்சிய தொகுதியில் தான் ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.