நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துவிட்டார். அதனால் திரைத்துறையை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறார். அவர் நடிக்கும் கடைசி இரண்டு படங்களில் ஒன்றை இயக்கும் வாய்ப்பு வெங்கட் பிரபுவுக்குக் கிடைத்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்யின் திரை வாழ்க்கையில் அதிமுக்கியத்துவமான படம் கைகளில் கிடைக்கிறது. டெக்னாலஜியையும் நாஸ்டாலஜியையும் கலந்து ரசிகர்கள் ஆர்வத்தைத் தூண்டும் படமாக அதை அமைத்து ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கிறார். விஜய், அஜித் என இருவரையும் இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். ஆனால், இன்று இயக்குநராக கலக்கிக் கொண்டிருக்கும் வெங்கட் பிரபு, தமிழ்த் திரையுலகில் நடிகராகக் களமிறங்கியவர்.
வெங்கட் பிரபுவின் திரைத்துறைப் பயணம் அவரது படங்களைப் போலவே பரபரப்பு நிறைந்தது. ஜாலியானது, எமோஷனலானது! தன் தந்தை கங்கை அமரனைப் போலவே பல்வேறு திறமைகளைக் கொண்டவர் இயக்குநர் வெங்கட் பிரபு.
ஜாலியான 70’ஸ் கிட்:
கங்கை அமரன் – மணிமேலை தம்பதிக்கு 1975ல் மகனாகப் பிறந்தவர் வெங்கட் பிரபு. ஆம் 2கே கிட்ஸ்களுக்கு இணையாகப் படங்களில் ஜாலி பண்ணும் இவர் ஒரு 70’ஸ் கிட்!
அப்பா பாடலாசிரியர், இசையமைப்பாளர், திரைப்பட இயக்குநர். பெரியப்பா உலகமே போற்றும் இசைஞானி என சினிமா பின்புலம் உள்ள குடும்பத்திலிருந்து வந்தவர் வெங்கட் பிரபு.
திரையுலகுக்குக் கதாநாயகனாக என்ட்ரி கொடுக்க முயன்றவருக்குப் பல சவால்கள். சின்ன சின்ன பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.
`பயணங்கள் முடிவதில்லை’, `ஏப்ரல் மாதத்தில்’, உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்தார். இயக்குநர், நடிகர் சமுத்திரக்கனி இயக்கிய `உன்னைச் சரணடைந்தேன்’ படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார்.
GOAT வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடிப்பது இதுதான் முதன்முறை, ஆனால் விஜய்யும் வெங்கட் பிரபுவும் இணைந்து நடித்திருக்கின்றனர். சிவகாசி படத்தில் விஜய்யின் மச்சான் பாத்திரத்தில் வெங்கட் பிரபு நடித்திருப்பார். இன்று வரை குறிப்பிட்ட சில படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அஜித்துக்கு நண்பராக `ஜி’ திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமல்ல வெங்கட் பிரபு சிறப்பாகப் பாடவும் செய்வார். சங்கீதக் குடும்பத்தில் பிறந்தவர் அல்லவா!
யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜாவுக்கு எல்லாம் ட்ரையல் பாடிக்கொடுப்பது இவர்தான்! யுவன், கார்த்திக், பிரேம்ஜி, கங்கை அமரன் இசையில் பாடவும் செய்துள்ளார்.
சென்னை 600028
வெங்கட் பிரபுவுக்கு நடிப்பது, பாடுவது எனப் பலதுறைகளில் திறமை இருந்தாலும் தனக்காக துறையாக அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டது திரைப்பட இயக்கத்தைதான்.
2007ம் ஆண்டு அவர் இயக்கிய சென்னை 600028 தமிழ் சினிமாவுக்கு ஃப்ரெஷ் வரவு. சென்னை இளைஞர்களில் எதார்த்தமான வாழ்க்கைமுறையை காமெடியாக ப்ரஸண்ட் செய்து வென்றார்.
மங்காத்தா டா!
அந்த வழியே காமடி த்ரில்லராக வந்த சரோஜாவும் ஹிட், கோவா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. “இவர் காமடி பட இயக்குநர்” எனப் பட்டம் கட்டப்படாமல் ஒவ்வொரு படத்திலும் வேரியேஷன் காட்டி வந்தார். எல்லாவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு அவர் இறங்கியடித்த மாஸ் சிக்ஸர் தான் மங்காத்தா!
தல அஜித்துக்கு சால்ட் அண்ட் பெப்பர் லுக், ஃபுல் நெகடிவ் ஷேட் வெற்றிகரமான ஆன்ட்டி-ஹீரோ திரைப்படம் மங்காத்தா. அந்தப் படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபு படங்கள் மீதான எதிர்பார்ப்பு அபாரமாக எகிறியது.
எந்த டெம்ப்ளேட்டிலும் சிக்காமல், பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி என புதிய பரிட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்டார்.
`சென்னை 28 II’ எனத் தனது பழைய டீமுக்கு புது ரத்தம் பாய்ச்சினார். மன்மத லீலை என அடல்ட் காமடியிலும் கால்வைத்தார்.
வந்தான் சுட்டான் செத்தான் – ரிப்பீட்டு
ஹாலிவுட்டில் மட்டுமே நாம் பார்த்துவந்த டைம் லூப் கான்செப்டை மாயவித்தைக் காரன் போலத் திரைகளில் நிகழ்த்திக்காட்டிய படம் `மாநாடு’. பெரும் வெற்றி பெற்றதோடு சிம்புவின் கரியரிலும் முக்கிய படமாக இடம்பெற்றது.
புதிய களங்கள், புதிய கான்செப்டுகள் இருந்தாலும், யுவன், பிரேம்ஜி, வைபவ் எல்லாம் இவரின் கான்ஸ்டன்ட்கள்!
வெங்கட் பிரபுவின் திரைப்படம் வெளியீடு இளைஞர்களுக்கு எப்போதுமே கொண்டாட்டமானதாக அமைந்திருக்கிறது. கஸ்டடி படத்துக்காக ஆந்திரா சென்றுவந்த வி.பி, தளபதி படத்துடன் திரும்பியிருக்கிறார்.
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உங்களுக்குப் பிடித்த திரைப்படம் எது? கமென்ட்டில் சொல்லுங்க!