GOAT: நீச்சல் வீராங்கனை; பல் மருத்துவர்; மிஸ் இந்தியா; விஜய் ஜோடியான மீனாட்சி சௌத்ரி- சில தகவல்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The G.O.A.T) திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

GOAT ஹீரோயின் மீனாட்சி சௌத்ரி:

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ‘புதிய கீதை’ படத்திற்குப் பிறகு, விஜய் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இந்தப் படத்தில் இணைந்திருக்கிறது. பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். தவிர, வெங்கட் பிரபு படத்தில் வரும் ஆஸ்தான நடிகர்களான வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

G.O.A.T படத்தில்…

இதில் நடிகை மீனாட்சி சௌத்ரி விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். முதல் முறையாக விஜய்யுடன் கைகோர்க்கும் வெங்கட் பிரபு பிரபல நடிகைகளைத் தேர்வு செய்யாமல் மீனாட்சி சௌத்ரியை தேர்வு செய்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. ஏற்கெனவே தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் ‘குண்டூர் காரம்’ படத்தில் மீனாட்சி நடித்திருக்கிறார். தற்போது விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவ்வளவு குறுகிய காலத்தில் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் அளவுக்குப் புகழ்பெற்றிருக்கிறார்.

யார் இந்த மீனாட்சி சௌத்ரி? அவரைப் பற்றிய சில தகவல்கள் இங்கே!

திரைக்கு முன்

* 27 வயதில் விஜய்க்கு ஜோடியான மீனாட்சி சௌத்ரியின் பூர்வீகம் ஹரியானா மாநிலம். நீச்சல் மற்றும் பேட்மிட்டன் வீராங்கனையான இவர், இளங்கலையில் டென்டல் சர்ஜரி படித்து முடித்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர், 2018ம் ஆண்டு நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா அழகி போட்டியில் பட்டத்தை வென்று சாதனை படைத்திருக்கிறார். தொடர்ந்து மாடலிங்கில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

மீனாட்சி சௌத்ரி

மீனாட்சி சௌத்ரியின் திரைப்பயணம்

* மாடலிங்கில் ஆர்வம் கொண்ட இவர், முதலில் ‘Out of love’ என்ற வெப் சீரிஸ் மூலம் திரைத்துறைக்கு என்ட்ரி ஆகி இருக்கிறார். அதன் பிறகு பட வாய்ப்புகள் வரவே, தெலுங்கில் 2021ஆம் ஆண்டு வெளியான ‘இச்சாட வாகனமுலு நிலுப ராடு’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார். அதற்குப் பிறகு, ரவி தேஜாவுடன் ‘கில்லாடி’ என்ற படத்தில் நடித்திருந்தார். நானி தயாரித்த ‘HIT – The Second Case’ படத்தில் அத்வி சேஷுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படம் பிரமாண்ட வெற்றியடைந்தது. டோலிவுட்டில் பிஸியாக இருந்தபோதே, தமிழிலிருந்து வந்த அழைப்புதான், ‘கொலை’. பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இப்படத்தின் மையமே இவரது கதாபாத்திரம்தான். பிரபல மாடல் கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு அந்தப் படத்தில் பேசப்பட்டது.

அதன் பிறகு தெலுங்கில் ‘ஹிட்’ படம் சூப்பர்ஹிட்டாக, விஸ்வாக் சென்னுக்கு ஜோடியாக ஒரு படம், வருண் தேஜுடன் நடிக்கும் ‘மட்கா’ என்ற மல்டிலிங்குவல் படம் என அடுத்தடுத்து குவிந்தன வாய்ப்புகள். ‘அலா வைகுந்தபுரமுலோ’ பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் த்ரிவிக்ரம் ஶ்ரீநிவாஸ் மகேஷ்பாபுவை வைத்து இயக்கிய ‘குண்டூர் காரம்’ படத்தில் பூஜா ஹெக்டேவுக்குப் பதில் இணைந்தார் மீனாட்சி.

மீனாட்சி சௌத்ரி

தவிர, வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்திலும் மீனாட்சிதான் நாயகி. இப்படி தெலுங்கில் பயங்கர பிஸியாக இருக்க, தமிழிலிருந்து அடித்திருக்கிறது ஜாக்பாட். அதுதான் விஜய்க்கு ஜோடியாக ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The G.O.A.T) படத்தில் நடிக்கும் வாய்ப்பு. தமிழில் இரண்டாவது படத்திலேயே விஜய்யுடன் இவர் இணைந்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவரின் இந்த வெற்றி பயணத்துக்கு அவரது விட முயற்சிகளும் ஒரு காரணம்தான்.

தொடர்ந்து கலக்குங்க மீனாட்சி!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.