சீரகத்துக்கு ‘போஜன குடோரி’ என்றொரு பெயர் இருக்கிறது. இதற்கு சாப்பாட்டை செரிக்க வைப்பது என்று அர்த்தம். சீர் + அகம் = சீரகம். இதில் அகம் என்பது வயிற்றையும் குறிக்கும், மனதையும் குறிக்கும். இந்த இரண்டையும் சீராக வைப்பதால்தான் இதற்கு சீரகம் என்று பெயர். இதன் நன்மைகள் குறித்து விளக்குகிறார் சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு.
* எந்த மருந்துக்கும் குணமாகாத நாள்பட்ட அல்சருக்கான தீர்வு சீரகப்பொடிதான். ஆனால், சீரகப்பொடியை வீட்டில்தான் தயாரிக்க வேண்டும். கடையில் வாங்கக் கூடாது. அரை டீஸ்பூன் சீரகப்பொடியை சிறிது பசு வெண்ணெயில் குழைத்து, ஒன்றரை மாதம் சாப் பிட்டால் தீராத வயிற்றுப்புண்ணும் குணமாகும். இதைச் செய்ய முடியாதவர்கள், சீரகப்பொடி, முட்டையின் வெள்ளைக்கரு, எலுமிச்சைச்சாறு, வெல்லம், நெய், தேன் சேர்த்துச் செய்த சீரக லேகியத்தைச் சாப்பிடலாம்.
* வைட்டமின் ‘பி’ குறைபட்டால் சிலருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரும். உதடு வீங்கியதுபோல இருக்கும். இவர்கள், 2 கிராம் சீரகப்பொடியில் ஒரு டீஸ்பூன் தேன் அல்லது பால் சேர்த்து சாப்பிட்டு வர, வாய்ப்புண் சரியாகும்.
* மாதவிடாய் கோளாறுகளுக்கும் சீரகப்பொடி அருமருந்து.
* கற்கண்டுத்தூளுடன் சீரகப்பொடி சேர்த்து சாப்பிட்டு வந்தால், தொடர் இருமலும், வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால் விக்கலும் குணமாகும்.
* உணவு செரிமானம் ஆகாமல் எதுக்களித்தால், இளஞ்சூடான சீரகத் தண்ணீர் அருந்தலாம்.
* சாப்பிட்டவுடனே வயிறு உப்புசமாகிறது என்றால், சீரகத்தையும் ஏலக்காயையும் சம அளவில் எடுத்து, இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து, உணவுக்குப் பின் கால் டீஸ்பூன் அளவு சாப்பிட பிரச்னை தீரும்.
* இஞ்சியை தோல் சீவி உலரவைத்து, அதே அளவுக்கு சீரகத்தை எடுத்து, இரண்டையும் பொன் வறுவலாக வறுக்கவும். இத்துடன் சமஅளவு நாட்டுச்சர்க்கரையைக் கலக்கவும். இந்தக் கலவையை அரை டீஸ்பூன் அளவுக்கு காலை வேளையில் சாப்பிட, ஒற்றைத்தலைவலி படிப்படியாகக் குறையும்.
* 100 கிராம் சீரகத்தை, அது மூழ்கும் அளவுக்கு எலுமிச்சைச்சாறு விட்டு வெயிலில் வைக்க வேண்டும். காய்ந்ததும் இஞ்சிச்சாறு விட்டு வெயிலில் வைக்க வேண்டும். காய்ந்ததும் நெல்லிச்சாறு விட்டு வெயிலில் வைக்க வேண்டும். சீரகம் நன்கு காய்ந்ததும் பொடி செய்ய வேண்டும். இதன் பெயர் அசை சூரணம். அசை என்றாலும் சீரகம் என்றுதான் அர்த்தம். வருடக்கணக்கில் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரை சாப்பிட்டு வருபவர்கள், மூன்று மாதங்களுக்கு இந்த அசை சூரணத்தைச் சாப்பிட்டு வர, படிப்படியாக ரத்த அழுத்தம் கட்டுப்படும். அதன் பிறகு அடிக்கடி ரத்த அழுத்த அளவை பரிசோதித்து, மருத்துவரின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும்.
* 100 மில்லி நல்லெண்ணெயில் ஒரு டீஸ்பூன் சீரகம் போட்டு, அடுப்பில் சிறு தீயில் வைக்க வேண்டும். சீரகம் சிவந்து எண்ணெயில் மிதக்கும்போது இறக்கி விட வேண்டும். சீரகத்தை கையில் எடுத்துப்பார்த்தால் உடையும். இதுதான் பதம். இந்தத் தைலத்தின் பெயர் அசைத்தைலம். இதைத் தலைக்குத் தேய்த்துக் குளித்துவந்தால், ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிக நல்லது. ஆரம்பநிலை கண்புரை குணமாகும். அசை சூரணமும், அசைத்தைலமும் கடைகளிலும் கிடைக்கும்.
விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41