கொல்கத்தா: இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் நீதியை உச்ச நீதிமன்றம் வழங்கும் என்ற நம்பிக்கை ஐஎம்ஏ-வுக்கு உள்ளது. எனவே இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் கைகளில் விட்டுவிடுவோம். பெண் மருத்துவர் கொலைவழக்கு விவகாரத்தை விசாரிக்கதேசிய அளவிலான பணிக்குழுவை உச்ச நீதிமன்றம் உருவாக்கியுள்ளது.
எனவே, ஒட்டுமொத்த மருத்துவ சமூகமும் உச்ச நீதிமன்றத்தை நம்ப வேண்டும். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பவேண்டும். நோயாளிகள் கவனிப்பு மற்றும் சிகிச்சை என்பது மருத்துவத் தொழிலின் முதன்மையான பணியாகும். அனைத்து மருத்துவர்களும், உச்ச நீதிமன்றத்தின்மேல் நம்பிக்கை வைத்து உடனடியாக மருத்துவப்பணிக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.