GOAT: `விஜய் சார் கூட பைக்கில போன அந்த ஒரு ரைடு..!’ – நெகிழ்ந்த CSK ரசிகர் சரவணன்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க வெளியாகியிருக்கும் `GOAT’ திரைப்படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடும் மேட்ச்சும் ஒரு பகுதியாக இடம்பெற்றிருக்கிறது. சேப்பாக்கத்தில் வைத்து நடைபெறும் அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சியை திருவனந்தபுரத்தின் கிரிக்கெட் மைதானத்தில் காட்சிப்படுத்தியிருந்தனர்.

Saravanan

கிரிக்கெட் மைதானத்தில் நடந்த அந்தப் படப்பிடிப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகரான சிஎஸ்கே சரவணனும் பங்கேற்றிருந்தார். அவரிடம் ‘GOAT’ படத்தில் நடித்த அனுபவங்களைப் பற்றி பேசினோம்.

CSK Saravanan

அவர் பேசியதாவது, “இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என நினைத்து பார்த்ததே இல்லை. சிறுவயதிலிருந்தே விஜய்யின் தீவிர ரசிகன் நான். ஒரு படம் விடாமல் திரையரங்கில் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட ரசிகனுக்கு இப்படியொரு வாய்ப்பு பெரிய வரம்தான். சிஎஸ்கேவாலும் தோனியாலுமே இதெல்லாம் சாத்தியப்பட்டது. முன்பே இயக்குனர் வெங்கட்பிரபுவை எனக்குத் தெரியும். அவரும் தீவிரமான சிஎஸ்கே மற்றும் தோனி ரசிகர். சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த போதே கண்டிப்பாக உங்களை எதாவது படத்தில் பயன்படுத்திக் கொள்கிறேன் என உறுதியாக கூறியிருந்தார்.

சொன்னபடியே சில மாதங்களுக்கு முன்பு ‘GOAT’ படத்துக்காக அழைத்தார். திருவனந்தபுரம் கிரிக்கெட் மைதானத்தில் படப்பிடிப்பு நடந்த போது மூன்று நாட்கள் என்னை அழைத்திருந்தார்கள். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களை எப்படி கவனித்துக் கொண்டார்களோ அப்படியே என்னையும் அன்பாக கவனித்துக் கொண்டார்கள்.

CSK Saravanan

இவ்வளவு நாள்கள் திரையில் மட்டுமே பார்த்து ரசித்த விஜய் சாரை நேரில் பார்த்தேன். அவர் என் தோள் மீது கைபோட்டு நலம் விசாரித்ததையெல்லாம் மறக்கவே முடியாது. டிரெய்லரில் ஒரு ஸ்டண்ட் காட்சியில் விஜய் சார் பைக் ஓட்டுவதைப் போல பார்த்திருப்பீர்கள். படப்பிடிப்பில் அந்த பைக்கில் என்னை ஒரு ரைடும் அழைத்துச் சென்றார். அதெல்லாம் கனவு மாதிரி இருந்தது.

CSK Saravanan

படப்பிடிப்பிலிருந்து கிளம்பும்போது விஜய் சாருக்கு ஒரு சிஎஸ்கே ஜெர்சியை கிஃப்ட்டாக கொடுத்தேன். விஜய் சாருமே சிஎஸ்கே மற்றும் தோனியின் தீவிர ரசிகன்தான். படத்தில் ஒரு காட்சியில்தான் வருவேன். ஆனாலும் இது எனக்கு பெரிய வாய்ப்புதான். சர்ப்ரைஸாக குடும்பத்தினரை அழைத்துச் சென்று முதல் காட்சியை கொண்டாடி பார்க்கவிருக்கிறேன்.’ என்கிறார்.

சிஎஸ்கே சரவணனுக்கு வாழ்த்துகள்!

விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.