`கார் ரேஸுக்கு ஒரே இரவில் நீதிமன்ற அனுமதி பெற முடியும்; விஜய் மாநாட்டுக்கு மட்டும்…' – பிரேமலதா

“ஜனநாயக நாட்டில் கட்சி நடத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. யார் வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது…” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த்

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மதுரை வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, “அமெரிக்காவில் முதலமைச்சர் சைக்கிள் ஒட்டுகிறார், பாடுகிறார், சிலைகளின் முன்பு போட்டோ எடுக்கிறார். இது சுற்றுலா பயணமாக இல்லாமல் எவ்வளவு முதலீடுகளை ஈர்க்கிறார் என்று பார்ப்போம். ஏற்கெனவே பல நாடுகளுக்கு சென்று எவ்வளவு முதலீடுகளை ஈர்த்தனர், இளைஞர்களுக்கு எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என தெரியவில்லை.

மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழ்நாட்டுக்கு எந்த பலனுமில்லை. அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாகும். அதற்கு மாற்றாக தமிழ்நாட்டிலேயே அணைகளை கட்ட திட்டமிட வேண்டும்.

பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கக்கூடியது. சினிமா துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் நடக்கிறது. பெண்களை தவறாக தவறாக பயன்படுத்தும் மனப்பான்மை மாற வேண்டும். பசுத்தோல் போர்த்திய புலிகள் போல பெரிய மனிதர் போர்வையில் பல வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர். பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும், அவர்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்.

பிரேமலதா விஜயகாந்த் – விஜய்

பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு தூக்கு தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும். சில ஆண்களின் தவறான செயல்களால் மொத்த ஆண்களுக்கும் தலைகுனிவு ஏற்படுகிறது.

விஜயின் GOAT படத்திற்கு வாழ்த்துகள். விஜய்யின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் இந்த அரசுக்கு என்ன பிரச்னை? கார் ரேஸ் நடத்துவதற்கு ஒரே இரவில் நீதிமன்ற அனுமதி பெற அரசால் முடிகிறது. ஜனநாயக நாட்டில் கட்சி நடத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்? யார் வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது.

ஆவினில் பாலில் தண்ணீர் கலப்பது ஊரறிந்த உண்மை. பல ஊழல்கள் நடப்பதும் உண்மை, இதையெல்லாம் கவனிக்க அரசாங்கம் தவறிவிட்டது.

முதலமைச்சர் அமெரிக்கா செல்வதற்கு பதிலாக தமிழ்நாட்டில் நடக்கும் ஊழல்களை சரி செய்தாலே போதும். ஒரே இரவில் ரூ.5,000 கோடிகள் செலவு செய்து கார் ரேஸ் நடத்துவதால் யாருக்கு என்ன பலன் அந்த பணத்தை வைத்து தமிழ்நாடு முழுவதும் நல்ல தரமான சாலைகளை அமைத்திருக்கலாம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றலாம்.

விஜய் மாநாடு நடத்தி, கட்சி தொடங்கி, கொள்கைகள், செயல்பாடுகளை அறிவித்த பின்னர்தான் அவருடனான கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.