சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் சுதிர் சர்மா, ரவி தாகூர், ராஜிந்தர் ராணா, இந்தர் தத் லக்கன்பால், சேதன்யா சர்மா மற்றும் தேவேந்தர் குமார் ஆகியோர் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜனுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
மேலும் சட்டப்பேரவையில் பட்ஜெட் நிறைவேற்றப்பட்ட போதும், இவர்கள் கட்சி கொறடாவின் உத்தரவை மீறி வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகியிருந்தனர். இதனால் இவர்கள் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் சுதிர் சர்மா மற்றும் இந்தர் தட் லக்கன்பால் ஆகியோர் இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்கு திரும்பினர். மற்ற 4 பேர் தோல்வியுற்றனர்.
இந்நிலையில் இமாச்சல் சட்டப்பேரவையில் கட்சிதாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம்செய்யப்பட்ட எம்எல்ஏ.க்களுக்கு ஓய்வூதியம் கிடையாது எனஇமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் எம்எல்ஏ.க்கள் ஓய்வூதியம் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அதை முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தாக்கல் செய்தார். அந்தமசோதா இமாச்சல் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் கட்சி தாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ.க்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது.