கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

கொல்கத்தா: நிதி முறைகேடுகள் தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் அரசு மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) சோதனை மேற்கொண்டனர்.

கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கடந்த மாதம் நடந்தபோது அந்த மருத்துவமனையின் முதல்வராக இருந்தவர் சந்திப் கோஷ். பயிற்சி மருத்துவர் விவகாரம் தீவிரமடைந்ததை அடுத்து சந்திப் கோஷ் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

மருத்துவமனையின் முதல்வராக இருந்தபோது நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது, பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட உடன் அந்த இடத்தில் தடயங்களை அழிக்கும் நோக்கில் கட்டுமானப் பணிகளுக்கு உத்தரவிட்டது போன்ற குற்றச்சாட்டுக்கள் சந்தீப் கோஷ் மீது உள்ளன.

இந்நிலையில், நிதி முறைகேடுகள் தொடர்பாக சந்தீப் கோஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் மூவரின் வீடுகளில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பெலியாகட்டாவில் உள்ள சந்தீப் கோஷின் இல்லத்திலும், ஹவுரா மற்றும் சுபாஸ்கிராமில் உள்ள இரண்டு இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. சந்தீப் கோஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆகிய நான்கு பேரும் ஏற்கனவே சிபிஐ காவலில் உள்ளனர்.

சோதனை குறித்து அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம், “நாங்கள் காலை 6.15 மணியளவில் இந்த இடங்களை அடைந்து எங்கள் சோதனைகளைத் தொடங்கினோம்” என்று கூறியுள்ளார்.

சந்தீப் கோஷுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைக்கு இணையான வழக்கு தகவல் அறிக்கையை (ECIR) அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது.

முன்னதாக, ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் இது குறித்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மருத்துவமனையின் முன்னாள் துணை கண்காணிப்பாளர் டாக்டர் அக்தர் அலி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நிதி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த தொடங்கிய மாநில அரசின் சிறப்பு புலனாய்வுக் குழுவிடமிருந்து (SIT) சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டது.

ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் நடந்த ஊழலுக்கும் மருத்துவரின் மரணத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று டாக்டர் அக்தர் அலி கவலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.