நான்கு புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே. எம். ஜி. எச். குலதுங்க, டி. தொடவத்த மற்றும் ஆர்.ஏ. ரணராஜா ஆகிய நீதிபதிகள் மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எம்.சி.எல்.பி. கொபல்லாவ ஆகியோர் இவ்வாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் 107 ஆவது சரத்தின்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2024 செப்டெம்பர் 06 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊவா மாகாண ஆளுநராக அனுர விதானகமகே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் இந்த சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார்.