கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்றும் குற்றவாளி சஞ்சய் ராய் என்றே இதுவரை கிடைத்த ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஆக.9-ம் தேதி 31 வயதான முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டியும், வழக்கில் நீதி கோரியும் கொல்கத்தாவில் மருத்துவர்கள் இடைவிடாது போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் முதல்வர் மம்தா பானர்ஜிக்குகடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனிடையில் வழக்கு விசாரணையை சிபிஐ தாமதப்படுத்துவதாகக் கடந்த வாரம்கூட மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். அவரை தொடர்ந்து திரிணமுல் காங்கிரஸ் அமைச்சர் பிரத்யா பாசு கூறுகையில்:இந்த வழக்குசிபிஐ வசம் மாற்றப்பட்டு 20நாட்களுக்கு மேல் ஆகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. சிபிஐ நடத்தியவிசாரணையின் விரிவான அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.
கொல்கத்தா போலீஸ் இந்த வழக்கை விசாரித்த வரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவ்வப்போது தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டவரின் மரபணு சோதனை தகவல்களுடன் கூடிய மருத்துவ அறிக்கையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிபிஐ அனுப்பியதாகக் கூறப்படுகிறது. மருத்துவர்கள் தரக்கூடிய முடிவின் அடிப்படையில் விசாரணை நிறைவடையும். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோரின் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்பட 10-க்கும் அதிகமானோரிடம் உண்மை கண்டறியும் பாலிகிராஃப் கருவி சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆர்.ஜி.கர்மருத்துவக்கல்லூரியின் முதல்வராக பணியாற்றியபோது நிதி முறைகேட்டில் சந்தீப் கோஷ் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் அவரை சிபிஐ கடந்த திங்களன்று கைது செய்தது. அவர் மீது ஆதரவற்ற சடலங்களை விற்பனை செய்வது, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தொடர்பான டென்டர் விவகாரத்தில் முறைகேடு செய்தது போன்ற புகார்கள் பதிவாகி உள்ளன. ஆர்.ஜி.கர் மருத்துவமனை காவலாளி உள்பட்ட மேலும் மூன்று பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இந்த விசாரணைகள் அனைத்திலும் நடந்த பாலியல்வன்கொடுமையில் ஒன்றுக்கு மேற்பட்டோர் ஈடுபட்டதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. இந்த வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணை இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.