புதுடெல்லி: ‘தூய்மை இந்தியா’ திட்டத்தால்மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவு: ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் பலன்களை முன்னிறுத்தும் ஆராய்ச்சி முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கின்றன. பொதுக் கழிப்பிட வசதி மேம்படுவதற்கும் சிசு மற்றும்குழந்தை மரணங்களின் எண்ணிக்கை குறைவதற்கும் இடையில் முக்கிய தொடர்புள்ளது. தூய்மையான, பாதுகாப்பான கழிப்பிடவசதி நாட்டின் பொதுச் சுகாதாரத்தில் மாபெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இந்த விஷயத்தில் இந்தியா பீடு நடை போடுவதில் மிக்க மகிழ்ச்சி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தனது சமூக வலைதளப் பதிவில், ‘நேச்சர்’ எனப்படும் பிரிட்டிஷ் வார அறிவியல் ஆய்விதழ்வெளியிட்ட ஒரு ஆய்வுக்கட்டு ரையின் இணைப்பையும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார். “தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கழிப்பறை கட்டுமானம் மற்றும் இந்தியாவில் சிசு மரணம்” என்ற தலைப்பிட்ட அந்த ஆய்வுக்கட்டுரையில் கடந்த 2014-ல் ‘தூய்மை இந்தியா’ திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து கழிப்பறைகள் கட்டுமானம் மளமளவென அதிகரித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் அடித்தட்டு மக்கள் மற்றும்கீழ் நடுத்தர மக்களின் ஆரோக்கியம் மேம்பட்டுள்ளது. குறிப்பாக ‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் பின்னாளில் நாட்டில் சிசு மரண விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. ஆண்டுதோறும் 70 ஆயிரம் சிசு மரணங்கள் தவிர்க்கப்பட்டிருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.