புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளை அரச-தனியார் பங்ககளிப்புடன், அபிவிருத்தி செய்ய விரும்பும் முதலீட்டாளர்களை இனங்காண்பதற்கு, தமது ஆரவத்தை வெளிப்படுத்துமாறு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அதனடிப்படையில், கொழும்பு நகரை அண்மித்துள்ள கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, கொம்பனித்தெரு, தெஹிவளை ஆகிய புகையிரத நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ், ‘எல்ல’ புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள காணி நீண்ட கால குத்தகை அடிப்படையில் லக்சல நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது, அதனை அரச மதிப்பீட்டாளர்களால், தீர்மாணிக்கப்பட்டுள்ளவாறு தரை வாடகையும், அந்த நிறுவனத்தினால் பெறப்படும் வருமானத்தில் 5 வீதம் புகையிரத திணைக்களத்திற்கு கிடைக்கும் என்றும் அவர் உதாரணமாக சுட்டிக்காட்டினார்.
இதன்படி, அரச-தனியார் பங்களிப்புடன் நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய புகையிரத நிலையங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு போட்டி அடிப்படையில் முன்மொழிவுகளை அழைத்து பொருத்தமான முதலீட்டாளர்களை தெரிவு செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.