நாட்டின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் மாடலை அடுத்த சில மாதங்களுக்குள் ஐரோப்பா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இந்திய சந்தைக்கு ஜனவரி 2025ல் விற்பனைக்கு வெளியிடப்படுவதையும் உறுதி செய்துள்ளது
64வது SIAM வருடாந்திர கூட்டத்தில் பேசிய மாருதி சுசூகி நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ திரு.ஹிசாஷி டேக்குச்சி அவர்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி முகமை வெளியிட்டுள்ள குறிப்பில் eVX மாடலில் 60Kwh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 500 கிலோ மீட்டர் வரையிலான ரேஞ்ச் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்துள்ளார்.
முதல்முறையாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள இந்த எலக்ட்ரிக் கார் இந்திய சந்தையிலும் விற்பனைக்கு வெளியாகும். மேலும் நெக்சா டீலர்கள் வழியாக விற்பனை செய்வதற்கான டீலர்களுக்கான சார்ஜிங் மையங்களை நிறுவுவதற்கும் மாருதி தயாராகி வருகின்றது. எனவே, அடுத்த சில மாதங்களில் பல்வேறு டீலர்களிலும் சார்ஜிங் மையங்கள் நிறுவப்படும். மேலும், ஜனவரி 2025 இல் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
மாருதி சுசூகி எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமல்லாமல் மாற்று எரிபொருள் சார்ந்த ஹைட்ரஜன், ஹைபிரிட் சார்ந்த வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முதலீடுகளை மேற்கொண்டு வருவதுடன் எதிர்காலத்திற்கான வாகனங்களை வடிவமைப்பதிலும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.