ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான துபாயின் ஆட்சியாளர் முஹம்மது பின் அல்மக்தூம். இவருக்கு ஷேக்கா மஹ்ரா அல் மக்தூம் (30) என்ற மகள் இருக்கிறார். முஹம்மது பின் ரஷீத் அரசுக் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், சர்வதேச உறவுகள் தொடர்பான துறையில் இங்கிலாந்தில் பட்டம் பெற்றிருக்கிறார். மேலும், பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பாகத் தொடர்ந்து பேசி வருபவராகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிசைனராகவும் அறியப்படுகிறார்.
கடந்த ஆண்டு, பிரபல தொழிலதிபர் ஷேக் மனா பின் முஹம்மது பின் ரஷீத் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் இளவரசி ஷேக்கா மஹ்ரா அல் மக்தூம் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில், முஸ்லிம் ஆண்கள் பயன்படுத்தும் தலாக் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, “அன்புள்ள கணவருக்கு… நீங்கள் வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக அறிகிறேன்.
அதனால், நம் விவாகரத்தை இதன்மூலம் அறிவிக்கிறேன். நான் உன்னை விவாகரத்து செய்கிறேன் (தாலாக்)… நான் உன்னை விவாகரத்து செய்கிறேன் (தாலாக்)… நான் உன்னை விவாகரத்து செய்கிறேன் (தாலாக்)… டேக் கேர்… இப்படிக்கு உங்கள் முன்னாள் மனைவி.” எனப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு வைரலானது.
இந்நிலையில், அவர் நிர்வகித்து வரும் Mahra M1 என்ற அவரது பிராண்டின் கீழ் பர்ஃப்யூம் ஒன்றின் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறார். அந்த பர்ஃப்யூம் பெயர் Divorce (விவாகரத்து). இந்த பெயர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.