அவிநாசி: அவிநாசி அருகே மகாவிஷ்ணு அலுவலகத்தை முற்றுகையிடும் முயற்சியைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
அவிநாசி அருகே குளத்துப்பாளையத்தில் பேச்சாளர் மகாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளை அலுவலம் உள்ளது. இந்த அலுவலகத்தை இன்று (செப்.10) முற்றுகையிடப் போவதாக நவீன மனிதர்கள் இயக்கம் என்ற அமைப்பு அறிவித்தது. அதன்படி, அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாரதி சுப்பராயன் தலைமையில் பல்வேறு முற்போக்கு இயக்கங்கள் மற்றும் கட்சியினர் அங்கு திரண்டனர்.அலுவலகத்தை முற்றுகையிட போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், அதே பகுதியில் உள்ள அணைப்புதூர் பேருந்து நிறுத்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறியது: “மாணவர்களிடையே மூட நம்பிக்கை பிரச்சாரம் செய்து, எதிர்காலத் தலைமுறையை தவறான வழிக்கு அழைத்து சென்ற மகாவிஷ்ணு பேசியதை கண்டித்தும், மாணவர்கள் மத்தியில் மாற்றுத்திறனாளி ஆசிரியரை இழிவு செய்ததை கண்டித்தும், பெண்களை போகப்பொருளாக சித்தரித்து ஆபாசமாக யூடியூப்பில் தொடர்ந்து பேசி வருவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
மேலும், மகாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளைக்கு வரும் சட்டவிரோத பண பரிமாற்றத்தை ஆய்வு செய்ய வேண்டும். தமிழக அரசால் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். அதேசமயம் இதன் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து அரசு முழுமையாக விசாரிக்க வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் விடுதலை கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி, மே 17 இயக்கம், ஆதித் தமிழர் பேரவை மற்றும் நவீன மனிதர்கள் இயக்கம் உள்ளிட்ட அமைப்பினர் உள்ளிட்ட கட்சிகளும் இயக்கங்களும் பங்கேற்றனர். பல்வேறு இயக்கங்கள் ஒரே சமயத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய திரண்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் அங்கு போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.