IND vs BAN Test Series: சுமார் நாற்பத்தி ஐந்து நாள்களுக்கு பின் இந்திய அணி சர்வதேச அரங்கிற்கு திரும்ப உள்ளது. கடைசியாக இலங்கை அணிக்கு எதிராக ஆக. 7ஆம் தேதி அன்று நடந்த ஒருநாள் போட்டியில் இந்தியா பங்கெடுத்தது. அதன்பின் இலங்கை அணி இங்கிலாந்தில் 3 டெஸ்ட் போட்டிகளையே விளையாடிவிட்ட நிலையில், இந்திய அணிக்கு சர்வதேச அரங்கில் நீண்ட ஓய்வு கிடைத்தது. தற்போது வங்கதேச டெஸ்ட் தொடரின் மூலம் அதன் நீண்ட சீசனை தொடங்க இருக்கிறது.
இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் செப். 19ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது. அதன்பின் கான்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. அதன்பின் அக்டோபர் முதல் வாரத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோத உள்ளன. இதில் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை மட்டும் பிசிசிஐ நேற்று முன்தினம் அறிவித்தது.
சேப்பாக்கத்தில் கடைசியாக…
ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணிக்கு சுமார் 2 ஆண்டுகளுக்கு ரிஷப் பண்ட் சர்வதேச டெஸ்ட் அரங்கில் விளையாட உள்ளார். பும்ரா இந்த போட்டியில் விளையாட உள்ளார். சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரேல், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், யாஷ் தயாள் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில் கேஎல் ராகுலுக்கு இடம் கிடைத்துள்ளது. சென்னையில் கடைசியாக இந்திய அணி 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக கொரோனா காலகட்டத்தில் டெஸ்ட் போட்டியை விளையாடியது.
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி
இத்தனை விஷயங்கள் இருந்தாலும் வங்கதேச அணிக்கு ஏன் இவ்வளவு பெரிய படையை இந்தியா இறக்குகிறது என பலரும் கேட்பது புரிகிறது. ஆனால், அடுத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் வீரர்களை அடையாளம் காண்பதற்கும், முழுத் திறனையும் வெளிக்கொணர்வதற்கும் வங்கதேச தொடர் முக்கியமானதாகும். அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் அணியை அதன் மண்ணிலேயே டெஸ்ட் தொடரை வாஷ்அவுட் செய்து அசத்தலான வெற்றியை வங்கதேசம் பெற்றிருந்தது. அந்த வெற்றியின் உற்சாகத்துடன் இந்தியாவுக்கு வருவதால் நிச்சயம் அந்த அணியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு, அனுபவம் வாய்ந்த பேட்டர்கள் என வங்கதேச அணி ஒரு தேர்ந்த டெஸ்ட் அணியின் வடிவத்தை பெறத் தொடங்கி உள்ளது. இன்னும் அது முழுமைப் பெறவில்லை என்றாலும் வங்கதேசத்தின் இந்த போக்கு ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும், அந்நாட்டின் அரசியல் சூழல் ஒருபுறம் இருக்க, வங்கதேசத்தின் இந்த விளையாட்டு என்பது நாம் உற்று நோக்க வேண்டிய ஒன்றாகவும் உள்ளது.
4 நாள்களுக்கு முன்…
இந்நிலையில், இந்திய அணிக்கு எதிராக தங்களின் வியூகங்களை வகுக்க வங்கதேச அணி டெஸ்ட் தொடருக்கு நான்கு நாள்களுக்கு முன்னரே சென்னைக்கு வர உள்ளனர். இங்கு வந்து சென்னையின் சூழலுக்கு ஏற்றவாறு தகவமைத்துக்கொள்வதற்கும், உரிய முறையில் பயிற்சி மேற்கொள்வதற்கும் இது நல்வாய்ப்பாக இருக்கும். சென்னை மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு பெரிதும் கைக்கொடுக்கும் என்பதால் இங்கு பந்துவீச்சுக்கு மட்டுமின்றி, இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை தாக்குபிடிக்க நல்ல பேட்டிங் பயிற்சியை மேற்கொள்ளவும் இந்த 4 நாள்கள் இடைவேளை வங்கதேச அணிக்கு உதவும்.
என்ன செய்யப்போகிறது இந்திய அணி?
வங்கதேச அணியின் இந்த நகர்வு இந்திய அணிக்கு நெருக்கடியை அளிக்கலாம். புஜாரா, ரஹானே இல்லாத இடத்தில் சுப்மான் கில், கேஎல் ராகுல் விளையாட உள்ளனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன்களை குவித்தாலும் டெஸ்ட் சீசனை சிறப்பாக தொடங்க வேண்டிய அழுத்தம் அவர் மீது உள்ளது. அதிரடியாக விளையாடுவதாக, அடக்கி வாசிப்பதா என்பதே ஜெய்ஸ்வாலுக்கு பெரிய குழப்பமாக இருக்கும். ரிஷப் பண்ட் அவரின் பேட்டிங் பிளோவை பிடித்தாலே போதுமானது. அஸ்வின், ஜடேஜா, பும்ரா, சிராஜ் ஆகியோர் தங்களின் வேலைகளை கச்சிதமாக செய்யக்கூடியவர்கள்.
அதுபோக விராட் கோலி, ரோஹித் சர்மாவையும் ரசிகர்கள் பெரிதாக எதிர்பார்க்கின்றனர். இவர்கள் இனி சென்னையில் அதுவும் டெஸ்ட் போட்டியில் மீண்டும் எப்போது விளையாடுவார்கள் என்பது தெரியாது. எனவே, சென்னையில் இவர்களுக்கான ரசிகர்கள் கூட்டம் நிச்சயம் குவியும் என்பதையும் மறக்க முடியாது. வங்கதேசத்தின் வியூகத்தை தகர்த்து, இந்த நீண்ட டெஸ்ட் சீசனை வெற்றியுடன் ரோஹித் & கோ தொடங்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக உள்ளது.