திருவண்ணாமலை: “திமுக பேருந்தில் பயணம் செய்யும் விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக பேருந்திலும் துண்டு போட்டு வைத்துள்ளார்,” என பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட (தெற்கு) பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலையில் இன்று (செப். 10) மாலை நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆர். பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளரும், வேலூர் பெருங்கோட்ட உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளருமான பேராசிரியர் ராம.சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மதுவிலக்கு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு தொல்.திருமாவளவன் எம்பி அழைப்பு விடுத்துள்ளார். திமுக பேருந்தில் பயணம் செய்யும் அவர், அதிமுக பேருந்திலும் துண்டு போட்டு வைத்துள்ளார். இதுதான், 2026-ல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அவர் விடுத்துள்ள செய்தி. என்னை கவனமாக கையாளுங்கள், அதிமுக பக்கமும் நான் செல்வேன் என மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
மாநாட்டுக்கு அழைத்ததுபோல் நினைத்துக் கொள்ள வேண்டாம்.நம்மைவிட்டால் எங்கே போவார்கள் என கூட்டணி கட்சிகளை திமுக நினைக்கிறது. திமுகவைவிட்டால் காங்கிரஸ் எங்கே செல்லும். திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சி ஆகியவை வெளியே போக வேண்டும் என தோன்றுகிறது. ஆனால், கவுரவம் படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் சொல்வது போல், எங்கே போவது? என தெரியாமல் உள்ளனர்.
நடிகர் விஜய்யால், தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. எம்ஜிஆரை தவிர சினிமாவில் இருந்து வந்தவர்கள் அரசியலில் வெற்றி அடையவில்லை என்ற தமிழகத்தின் தலைவிதிக்கு நடிகர் விஜய் மட்டும் விதிவிலக்கல்ல. உச்சத்தில் இருந்தவர் விஜயகாந்த். எதிர்கட்சி தலைவராக இருந்தவர். அவராலும் வெற்றி அடைய முடியவில்லை. ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணு கைது நடவடிக்கை என்பது, திமுகவின் பழிவாங்கும் நடவடிக்கையை காண்பிக்கிறது,” என்று அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், மாநிலச் செயலாளர் கோ. வெங்கடேசன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில தலைவர் லோகநாதன், அரசு தொடர்பு பிரிவு மாநிலத் தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.