இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டை அவமரியாதை செய்து விட்டது – மைக்கேல் வாகன் விமர்சனம்

லண்டன்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முன்னதாக இந்த தொடரின் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 219 ரன்கள் இலக்கை இலங்கை அணி வெற்றிகரமாக சேசிங் செய்தது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 325 ரன்கள் குவித்து பின்னர் இலங்கையை 263 ரன்களுக்கு சுருட்டியது. அதனால் 62 ரன்கள் முன்னிலைப் பெற்ற இங்கிலாந்து எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது இன்னிங்சில் சொதப்பலாக பேட்டிங் செய்த அந்த அணி 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அப்படி 2வது இன்னிங்சில் சுமாராக விளையாடியது கடைசியில் இங்கிலாந்தின் தோல்விக்கும் காரணமானது.

இந்நிலையில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றி விட்டதால் அஜாக்கிரதையுடன் இங்கிலாந்து 3வது போட்டியில் விளையாடி தோற்றதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். மேலும் இதுவே இலங்கைக்கு பதிலாக இந்தியா அல்லது ஆஸ்திரேலியா இருந்திருந்தால் கண்டிப்பாக அத்தொடரில் இங்கிலாந்து தோல்வியை சந்தித்திருக்கும் என்றும் அவர் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டையும் இலங்கையையும் அவமரியாதை செய்ததாக நான் கருதுகிறேன். ஏனெனில் அவர்கள் 3வது போட்டியில் பேட்டிங் செய்வதிலும் பீல்டிங் வைப்பதிலும் அதிகப்படியான ஆக்ரோஷத்தை காட்டினர். இங்கிலாந்து நல்ல நிலையை தொட்ட பின் அஜாக்கிரதையாக இருப்பதை வழக்கமாக வைத்துள்ளது. கடந்த ஆஷஸ் தொடரிலும் இந்தியாவுக்கு எதிரான ராஜ்கோட் போட்டியிலும் அவர்கள் அதையே செய்தனர். எனவே 2025-ல் காத்திருக்கும் கடினமான போட்டிகளுக்கு முன்பாக இது இங்கிலாந்தை தட்டி எழுப்பும் என்று நம்புகிறேன். இதுபோல இந்தியா அல்லது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடினால் நீங்கள் தப்பிப்பதற்கு வழியே கிடையாது” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.