புதுடெல்லி: நாட்டில் பாலியல் வன்கொடுமை வழக்குகள், போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடித்து வைக்க, விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி நாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியது. அதன்படி 2019-ம்ஆண்டு அக்டோபர் மாதம் முதல் விரைவு நீதிமன்றங்கள் செயல்பாட்டுக்கு வந்தன.
இந்நிலையில், விரைவு நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, தீர்வு காணப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, நிலுவையில் உள்ள வழக்குகளின்எண்ணிக்கை போன்ற விவரங்களை ‘இந்திய குழந்தைகள் பாதுகாப்பு’ என்ற தன்னார்வ தொண்டுநிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் குழந்தைகள் உரிமை ஆர்வலர் புவன் ரிப்பு கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டாலும், மொத்தமுள்ள 4 லட்சத்து 16,638 வழக்குகளில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு இறுதி வரையில், 52% (2 லட்சத்து 14,463 வழக்குகள்) மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளன.
இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், தற்போது செயல்படும் விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் தினமும் 554 வழக்குகளை முடித்து வைக்க வேண்டிய அவசியம் உள்ளது.
விரைவு நீதிமன்றங்கள் திட்டத்தின் கீழ் மொத்தம் 1,023 விரைவுசிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். ஆனால், கடந்த ஆக.2024-ம் ஆண்டு நிலவரப்படி 410போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் உட்பட மொத்தம் 755 விரைவு நீதிமன்றங்கள் மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளன.
3 ஆண்டுகள் ஆகும்: இவற்றில் ஆண்டுக்கு 76,319வழக்குகள் முடித்து வைக்கப்படுகின்றன. அதன்படி பார்த்தால், புதிதாக எந்த வழக்கும் வராமல் இருந்தால், தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்த்து வைக்க இன்னும் 3 ஆண்டுகள் ஆகும். அதேநேரத்தில் புதிய வழக்குகள் சேர்ந்தால் இன்னும் சுமையாகும்.
இதற்கிடையில், விரைவு நீதிமன்றங்களில் கடந்த 2020-ம் ஆண்டு ஒரு லட்சத்து 95,991 பாலியல் வழக்குள் பதியப்பட்ட நிலையில், கடந்த 2023-ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 2 லட்சத்து 78,4894 ஆக அதிகரித்துவிட்டது. இதனால் நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்த்து வைப்பதில் சிக்கல் தொடர்கிறது. எனினும், கடந்த 2020-ம் ஆண்டு விரைவு நீதிமன்றங்களில் 37,148 வழக்குகள் மட்டும் முடிக்கப்பட்ட நிலையில், 2023-ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 76,319 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க கூடுதலாக 1,000 விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். புதிய வழக்குகள் பதிவு செய்யப்படுவதை தடுக்க, பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டும். இவ்வாறு இந்திய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின்குழந்தைகள் உரிமை ஆர்வலர் புவன் ரிப்பு கூறியுள்ளார்.