அமெரிக்க அதிபர் தேர்தலில் மோதும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் – தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் நேருக்கு நேர் விவாதம் செய்யும் நிகழ்வு இன்று நடந்தது.
இதில் ஆப்கானிஸ்தான் போர், ரஷ்யா-உக்ரைன் போர் என இரு தரப்பினருக்கும் வெவ்வேறு கருத்து இருக்கும் பல விஷங்களைப் பற்றி வாதிட்டனர்.
ட்ரம்ப் தனது ஆட்சியில் ஒரு சர்வாதிகாரியாக உருவாக நினைத்தார் எனக் குற்றம்சாட்டினார் ஹாரிஸ்.
ரஷ்யா-உக்ரைன் போரில் உக்ரைன் வெற்றி பெற விரும்புகிறீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்ட போது ட்ரம்ப், “நான் போர் முடியவேண்டும் என விரும்புகிறேன்” என்று பதிலளித்தார். “போர் நிறுத்தப்பட வேண்டும். எனக்கு புதினையும் ஜொலன்ஸ்கியையும் நன்றாகத் தெரியும். எனக்கு இருவரிடமும் நல்ல உறவு இருக்கிறது. என்னால் இதை முடிக்க முடியும்” என்றார் ட்ரம்ப்.
ரஷ்யா – உக்ரைன் இடையே பேச்சு வார்த்தை மூலம் சமாதானத்தை உருவாக்க முடியும் என ட்ரம்ப் தெரிவித்தபோது, ட்ரம்ப் சர்வாதிகாரிகளைப் போற்றுவதாக வாதாடினார் கமலாஹாரிஸ்.
“போரின் எதார்த்தத்திலிருந்து திசைதிருப்பப் பார்க்கிறார் ட்ரம்ப். அவர் சர்வாதிகாரிகளைப் போற்றுகிறார். கிம் ஜாங் உன்னுடன் காதல் கடிதங்களைப் பரிமாறினார். அதனால்தான் பல இராணுவத் தலைவர்கள் என்னிடம் `நீங்கள் ஒரு அவமானம்’ என்றனர்” என்றார் ஹாரிஸ்.
மேலும், “ட்ரம்ப் அதிபராக இருந்திருந்தால் புதின் இந்நேரம் கீவில் அமர்ந்திருப்பார். ஐரோப்பாவின் மற்ற நாடுகளைக் குறிவைத்திருப்பார். ஒரு சர்வாதிகாரியுடன் நட்பு கொள்வதை நீங்கள் என்னவாக நினைக்கிறீர்கள், புதின் உங்களை மதிய உணவாகச் சாப்பிட்டுவிடுவார்” என ட்ரம்ப்பைத் தாக்கினார்.
இதற்குப் பதிலடி கொடுக்க, “புதின் உங்களை ஆதரித்தார். நான் இருந்திருந்தால் அப்படி நடந்திருக்காது. உங்களால் (கமலா, ஜோ பைடன்) ஐரோப்பிய நாடுகளுடன் என்னைப்போல உறுதியாகப் பேச முடியவில்லை. நாம் மொத்த ஐரோப்பாவையும் விட அதிக டாலர்கள் செலவிட்டுக்கொண்டிருக்கிறோம்” என்றார் ட்ரம்ப்.
உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பு கமலா ஹாரிஸ் உக்ரைன் சென்றதையும் குறிப்பிட்டார்.
மேலும் அவர், “பைடன் இதுவரை புதினுக்கு ஒரு ஃபோன்கால் கூடச் செய்யவில்லை. நான் வெற்றிபெற்றால் இருவருடனும் பேசுவேன். இது நிறுத்தப்பட வேண்டிய போர், மக்கள் இறந்துகொண்டிருக்கின்றனர். பைடனுக்குப் போரை எப்படி நிறுத்துவது என்றோ, புதினுடன் எப்படிப் பேசுவது என்றோத் தெரியாது. நாம் உலகப்போருடன் விளையாடிக்கொண்டிருக்கிறோம். நம் அதிபருக்கு (பைடன்) அவர் உயிருடன் இருப்பதேத் தெரியாது” என்றார் ட்ரம்ப்.
அதற்கு பதிலளித்த கமலா ஹாரிஸ், “நீங்கள் மோதுவது பைடனுக்கு எதிராக அல்ல, எனக்கு எதிராக” என்றார் காட்டமாக.
மேலும் ட்ரம்ப்பின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த கமலா, “நான் என்ன நடந்தது என்று விளக்குகிறேன். உக்ரைனில் அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்து உரையாடினேன். பின்னர் நேட்டோவின் கிழக்கு படையைச் சந்தித்தோம். எங்கள் ஆதரவினால்தான் இன்று உக்ரைன் ஒரு சுதந்திர இறையாண்மை கொண்ட நாடாக நிற்கிறது” என்றார்.
“அவர்கள் அவரை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அனுப்பினார்கள். அவர் தூதராகச் சென்ற சில நாட்களில் போர் தொடங்கியது. அவர் பேச்சுவார்த்தைகளில் மோசமானவர் போல” எனக் கமலா ஹாரிஸை பதிலுக்கு தாக்கினார் ட்ரம்ப்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY