ஜம்மு: எல்லைகளில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்முவின் அக்னூர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று (புதன்கிழமை) அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) வீரர் காயமடைந்தார். இந்தத் தாக்குதலுக்கு பிஎஸ்எஃப் வீரர்கள் பதிலடி கொடுத்தனர். என்றாலும், பாகிஸ்தான் தரப்பு உயிரிழப்புகள் குறித்து உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்து எல்லை பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “செப்.11, 2024 புதன்கிழமை அதிகாலை 02.35 மணிக்கு அக்னூர் பகுதியில் எல்லைக்கு அப்பால் இருந்து எதிர்பாராத துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்தத் தாக்குதலுக்கு எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தான் ராணுவத்தினரின் இந்தத் தாக்குதலில் ஒரு பிஎஸ்எஃப் வீரர் காயமடைந்தார். ராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்ட நிலையில், அது மீறப்படுவது எப்போதாவது மட்டுமே நடந்துள்ளது. கடந்த ஆண்டு ராம்கர் பகுதியில் பாகிஸ்தான் ரேஞ்சர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய தரப்பில் நடந்த முதல் உயிரிழப்பு இதுவாகும்.
இன்னும் சில தினங்களில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் சில நாட்களுக்கு முன்பு இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட வாக்குப்பதிவு செப்.18, இரண்டாம் கட்டவாக்குப்பதிவு செப்.25, மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு அக்.1 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கிறது.
துணை ராணுவப்படைகள் குவிப்பு: பத்தாண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னதாக மத்திய அரசு துணை ராணுவப்படைகளை அங்கு குவித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஜம்மு பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இந்தாண்டு மார்ச் – ஏப்ரல் இடையே சுமார் 60 முதல் 80 பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் அதிகமான பயங்கரவாதிகளை தூண்டிவிட பாகிஸ்தான் முயன்று வரும் நிலையில், கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய எல்லைப்பாதுகாப்பு படையின் டைரக்டர் ஜெனரல் டல்ஜித் சிங் ஆக.22-ம் தேதி ஜம்மு எல்லைக்கு சென்றிருந்தார். வருடாந்திர அமர்நாத் யாத்திரையின் போது பாதுகாப்பு பணிகளுக்காக அனுப்பப்பட்ட துணை ராணுவப்படையின் 450 கம்பெனிகளை மத்திய அரசு ஜம்மு காஷ்மீரிலேயே நிறுத்தி வைத்துள்ளது. அதேபோல் கூடுதலாக 450 கம்பெனி துணை ராணுவத்தை அனுப்ப உள்ளது.