டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மோசடிகள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றன. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சைபர் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் குறித்த வழக்கு அடிக்கடி செய்தித் தாள்களில் வெளிவருகிறது. மோசடி செய்பவர்கள், பெருமபாலாலும் முக்கியமான தகவல்களைத் திருடுவதற்கும், அதைத் தவறாகப் பயன்படுத்துவதற்கும், ஏதேனும் நிறுவன அதிகாரிகளாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு மோசடி நடவடிக்கைகளில் கொள்கிறார்கள். அந்த வகையில், தன்னை தொலஒதொடர்பு நிறுவன அதிகாரியாக அறிமுகப்படுத்திக் கொண்டு, பெண் ஒருவரை ஏமாற்றி, கோசடி நபர் ஒருவர் 27 லட்சம் ரூபாயை அபேஸ் செய்துள்ளார்.
உத்திரப்பிரதேசம் நாய்டாவில் வசிக்கும் 44 வயதான பெண் ஒருவர் சமீபத்தில் e-SIM மோசடிக்கு ஆளானார். அதில் அவர் சுமார் 27 லட்சம் ரூபாயை பறிகொடுத்துள்ளார். சைபர் மோசடிக்கு பலியான ஜோத்ஸ்னா பாட்டியா என்ற பெண், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஆகஸ்ட் 31 ஆம் தேதி, தொலைத்தொடர்பு நிறுவனத்தின் (Telecom Company) வாடிக்கையாளர் சேவை அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வாட்ஸ்அப் அழைப்பு விடுத்துள்ளார். தொலைத் தொடர்பு நிறிவன அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்ட மோசசடி நபர் இ-சிம்மின் சிறப்பு அம்சங்களைப் பற்றி அவரிடம் கூறி, அவரது சிம்மை இ-சிம்மாக மாற்றிக் கொள்வது நல்லது எனக் கூறியுள்ளார்.
மோசடி நபரின் வார்த்தையை நம்பிய ஜோத்ஸ்னா பாட்டியா eSIM அம்சத்தை செயல்படுத்த முன் வந்தார். மோசடி நபர் கூறியபடி சேவை வழங்கும் தொலைத் தொடர்பு நிறுவன செயலியில் உள்ள ஆப்ஷனை தேர்ந்தெடுத்து , தனது போனிற்கு வந்த சரிபார்ப்புக் குறியீட்டை உள்ளிட்டார். மோசடி பற்றி அறியாத பாட்டியா, அறிவுறுத்தப்பட்ட வழிமுறைகளை பின்பற்றினார். துரதிர்ஷ்டவசமாக, அவர் குறியீட்டை உள்ளிட்டவுடன், அவரது சிம் கார்டு செயலிழக்கப்பட்டது.
பாட்டியாவுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி புதிய சிம் கார்டு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், செப்டம்பர் 1ம் தேதி சிம்கார்டு கிடைக்காததால், வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு போன் செய்து விசாரித்துள்ளார். டூப்ளிகேட் சிம் பெற, சர்வீஸ் சென்டருக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில், அவருக்கு வங்கியிலிருந்து பல எஸ் எம் எஸ் செய்திகள் வந்திருப்பதை கவனித்துள்ளார்.
மோசடி நபர் அவரது செயலிழந்த தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அவரது மொபைல் வங்கிக் கணக்கை அணுகியுள்ளார். தொடர்புடைய மின்னஞ்சல் ஐடியை மாற்றுவதன் மூலம், பாதுகாப்பு சோதனைகளைத் தவிர்த்து, அவரது கணக்குகளில் இருந்து பெரிய தொகையை மாற்ற முடிந்தது. மோசடி செய்பவர் அவரது நிலையான வைப்புத்தொகையை உடைத்து, இரண்டு வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் 19 லட்சம் ரூபாயை எடுத்ததுடன், அவர் பெயரில் ₹7.40 லட்சம் கடனையும் வாங்கியுள்ளார்.
நொய்டா, செக்டார் 36, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் இந்திய நீதிச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 318 (4) (ஏமாற்றுதல்) மற்றும் 319 (2) (நேரில் மோசடி) ஆகியவற்றின் கீழ் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) வழக்குப் பதிவு செய்தனர்.