அரசுப் பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தியதோடு, மாணவர்களிடையே பிற்போக்கான கருத்துகளை போதித்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் மஹாவிஷ்ணு.
இவரின் மேடைப் பேச்சுகளை கேட்டு மாணவர்கள் பலரும் தியானம் செய்துகொண்டே அழும் காணொளிகளை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் தியானம் தொடர்பாக பேசி காணொளி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் செல்வராகவன்.
அந்த காணொளியில் அவர், “யாரோ ஒருத்தர் நான்தான் ஆன்மிக குருனு சொன்னால் அதை நம்பி 100 பேர் போய் உட்கார்ந்து கண் மூடி தியானம் பண்ணுவீங்களா? உண்மையான ஒரு குருவை நீங்கள் தேடிப் போக வேண்டாம். அவரே உங்களை தேடி வருவாரு. அந்த சந்திப்பு தானாகவே நடக்கும். விளம்பரங்களை கொடுத்து, மைக் வச்சு ‘நான் தியானம் பற்றி சொல்லி தர்றேன்’னு யாரும் சொல்லமாட்டார்கள். உண்மையான குரு தன்னை வெளிப்படுத்திக்கவே மாட்டார். தியானம் பண்றதுக்காக அவ்வளவு காய்ந்து இருக்குறீங்களா? தியானம் பண்றதுதான் உலகத்திலேயே சுலபமான விஷயம். உலகத்தில் இருக்கிற எல்லா மதமும் உங்களுக்குள் கடவுள் இருக்கிறார் என்பதைதான் போதிக்கிறது.
புத்தருடைய யுக்திதான் இருக்கிறதுலேயே சுலபமானது. முச்சு விடும் இடத்தில் மட்டும் கவனத்தை வைத்துக் கொள்ளுங்கள். முச்சு விடுறதை பற்றி யோசிக்காதீங்க. அந்த விஷயங்களெல்லாம் தானாகவே நடக்கும். இடையில வேறு எதையாவதுப் பற்றிய எண்ணம் வரும். அதை தவிர்க்கிறதை பத்திலாம் யோசிக்காதீங்க. அதுவாகவே வரும். கொஞ்ச நாள் இருக்கும். அதுவாகவே போயிடும். அதன் பிறகு மனசை பழைய இடத்துக்கு கொண்டு வந்திடுங்க. காலங்கள் கடந்ததும் அந்த மாதிரியான எண்ணங்களெல்லாம் தானாகவே போயிடும். இதைதான் புத்தரும் சொல்றாரு. நீங்க நீச்சல் தொடர்ந்து அடித்தால் தானாகவே நீச்சல் வந்துவிடும். அதே போலதான் இதுவும். இதுக்கு யாராவது மாற்றுக் கருத்து இருந்தா சொல்லுங்க! நான் ஒத்துக்கிறேன். இந்த விஷயத்துக்கு மாற்றுக் கருத்தே கிடையாது.” எனப் பேசியிருக்கிறார்